பழ வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை

சாகா அருகே,மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் பழ வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்,
பழ வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை
Published on

சிவமொக்கா;

சிவமொக்கா மாவட்டம் சாகர் டவுன் பகுதியில் வசித்து வந்தவர் தாஹீர் (வயது 35). இவர் அதே பகுதியில் பழ வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் தாஹீருக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது தாஹீரின் மனைவி கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் சில நாட்கள் கழித்து தாஹீர், தனது மனைவியை செல்போனில் தொடர்புகொண்டு குடும்பம் நடத்த வரும்படி அழைத்துள்ளார். ஆனால் அவரது மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த தாஹீர், தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த நிலையில் நீண்ட நாட்களாக தாஹீரின் வீடு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், ஜன்னல் வழியாக பார்த்தனர்.

அப்போது வீட்டுக்குள் தாஹீர் அழுகிய நிலையில் தூக்கில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் சாகர் போலீசார் தாஹீரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com