எரிபொருள் தட்டுப்பாடு இல்லை: வதந்திகளை நம்பி பீதி வேண்டாம் - மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம்

எல்பிஜி விநியோக மையங்களில் தட்டுப்பாடு எதுவும் ஏற்படவில்லை, ஏராளமான சரக்குகள் கையிருப்பில் உள்ளன.
எரிபொருள் தட்டுப்பாடு இல்லை: வதந்திகளை நம்பி பீதி வேண்டாம் - மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம்
Published on

புதுடெல்லி,

மேற்காசிய போர் காரணமாக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியதால் 28 இந்திய சரக்கு கப்பல்கள் அந்த வழித்தடத்தில் பயணிக்க முடியாமல் சிக்கின.

இவற்றில் 24 கப்பல்கள் அந்த நீரிணையின் மேற்கு பகுதியிலும் 4 கப்பல்கள் கிழக்கு பகுதியிலும் சிக்கி இருந்தன. பேச்சுவார்த்தையின் பலனாக 92.712 டன்னுடன் ஷிவாலிக், மற்றும் நந்தாதேவி ஆகிய இரு கப்பல்கள் முறையே கடந்த 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் குஜராத் வந்தடைந்தன.

ஜக் லாட்கி என்ற கப்பல் 80,800 டன் கச்சா எண்ணையுடன் குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தை 18-ம் தேதி வந்தடைந்தது. ஓமனில் இருந்து ஆப்ரிக்காவுக்கு பெட்ரோல் கொண்டு செல்லும் ஜக் பிரகாஷ் என்ற கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து தான்சானியாவை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது. மேலும் ஜக்வசந்த் பைன்கேஸ் எல்.ஜி.பி கப்ப இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

இந்தநிலையில், குஜராத்தில் சில பெட்ரோல் பங்குகளில் திடீரென பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. அகமதாபாத்தில் உள்ள பல பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் நிரப்புவதற்கு வாடிக்கையாளர்கள் அலைமோதினர்.

அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் போதுமான அளவு பெட்ரோல் கையிருப்பு உள்ளதாக உறுதி அளித்தாலும், பெட்ரோல் பங்குக்களில் இடங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன. இதற்கு முக்கிய காரணம், டீலர்கள் பணம் செலுத்துவதில் ஏற்பட்ட தற்காலிக சிக்கல்கள்தான் என தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், எரிபொருள் பற்றாக்குறை குறித்த வதந்திகளை நம்பி பீதியடைய வேண்டாம் என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இது தொடர்பாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி,

தற்போது நிலவும் புவிசார் அரசியல் சூழ்நிலை காரணமாக எல்பிஜி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. எல்பிஜி விநியோக மையங்களில் தட்டுப்பாடு எதுவும் ஏற்படவில்லை, ஏராளமான சரக்குகள் கையிருப்பில் உள்ளன.

நேற்று, சிலர் பீதியுடன் முன்பதிவு செய்ததையும் நாங்கள் கவனித்தோம். ஆனால் விநியோகம் சாதாரணமாகவே இருந்தது. பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான அளவில் உள்ளன.

பிஎன்ஜி விநியோகம் 100% உள்நாட்டு நுகர்வோருக்கானது, அனைத்து உள்நாட்டு நுகர்வோருக்கும் எல்பிஜி சிலிண்டர்களும் வழங்கப்படுகின்றன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com