

கொல்கத்தா,
கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநில அரசுகள் வாரத்தின் குறிப்பிட்ட நாட்களில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அறிவித்து அமல்படுத்தி வருகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
அதே சமயம் மேற்கு வங்க மாநிலத்தில் இந்த மாதத்தின் 5,8,20,21,27,28 மற்றும் 31 ஆகிய தேதிகளில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முழு ஊரடங்கால் பொதுப்போக்குவரத்து, அலுவலகங்கள் மற்றும் பிற வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன.
அத்தியாவசிய தேவைகளான மருந்துக்கடைகள் மற்றும் சுகாதார மையங்கள் வழக்கம் போல் இயங்கி வருகின்றன. முழு ஊரடங்கு காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் சோதனைச் சாவடிகளை அதிகரித்து, கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.