கேரளாவில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்; சாலைகள் வெறிச்சோடின

கேரளாவில் வார இறுதி நாட்களில் அமல்படுத்தப்பட்டு உள்ள முழு ஊரடங்கை முன்னிட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
கேரளாவில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்; சாலைகள் வெறிச்சோடின
Published on

திருவனந்தபுரம்,

கொரோனாவின் 2வது அலையில் நாடு முழுவதும் பெருமளவில் பாதிப்புகள் ஏற்பட்டன. இந்நிலையில், சமீப வாரங்களாக தொற்றுநோய் பாதிப்பு குறைந்துள்ளது. இதனால், கேரளாவில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை முதல் மந்திரி பினராயி விஜயன் கடந்த 15ந்தேதி வெளியிட்டார்.

இதனை தொடர்ந்து, கடந்த 17ந்தேதி காலை 7 மணி முதல் ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்தன. இதன்படி, 8 சதவீதத்திற்கு கீழ் கொரோனா பாதிப்பு விகிதம் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் கட்டுப்பாடுகளுடன் வழக்கம்போல் செயல்படவும், கடைகளை திறப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

அரசு அலுவலகங்கள் 25 சதவீத ஊழியர்களுடன் இயங்கும். பகுதியளவில் பொது போக்குவரத்து செயல்படும். அனைத்து நாட்களிலும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறக்கவும், மதுபானங்கள் விற்பனை செய்யும் பார்கள் திறக்கவும் அனுமதிக்கப்படும்.

கேரளாவில் ஊரடங்கு தளர்வுகளை முன்னிட்டு வேலைக்கு செல்லும் மக்கள் ஆட்டோ, பேருந்து ஆகிய வசதிகளை மீண்டும் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். எனினும், கேரளா முழுவதும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல் தொடர்கிறது.

இதன்படி, வார இறுதி நாளான இன்று காலை அனைத்து வர்த்தகம் சார்ந்த கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. மக்கள் அத்தியாவசிய தேவைகள் தவிர பிற விசயங்களுக்கு வெளியே செல்வது தடை செய்யப்பட்டு உள்ளது. விதி மீறல்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. கேரளாவில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

வாகனங்களில் செல்வோரை போலீசார் முறைப்படி விசாரணை செய்து சரியான ஆவணங்களை வைத்திருப்போருக்கு தொடர்ந்து பயணம் செய்ய அனுமதி வழங்குகின்றனர். வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உத்தரவால் சாலைகளில் வாகன போக்குவரத்து குறைந்து காணப்படுகிறது. மக்கள் கூட்டமும் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com