‘பி.எம்.கேர்ஸ்’ நிதியை தேசிய பேரிடர் நிவாரண நிதியத்துக்கு மாற்றக்கோரிய வழக்கு: மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

‘பி.எம்.கேர்ஸ்’ நிதியை தேசிய பேரிடர் நிவாரண நிதியத்துக்கு மாற்றக்கோரிய வழக்கின் மனுவினை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
‘பி.எம்.கேர்ஸ்’ நிதியை தேசிய பேரிடர் நிவாரண நிதியத்துக்கு மாற்றக்கோரிய வழக்கு: மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
Published on

புதுடெல்லி,

கொரோனா நிவாரணங்களுக்காக உருவாக்கப்பட்ட பிரதமர் பராமரிப்பு நிதியை (பி.எம்.கேர்ஸ்) தேசிய பேரிடர் நிவாரண நிதியத்துக்கு மாற்றக்கோரி தொண்டு நிறுவனம் ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்த வழக்கு, நீதிபதிகள் அசோக் பூஷண், ஆர்.சுபாஷ் ரெட்டி, எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய காணொலி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, பிரதமர் பராமரிப்பு நிதி என்பது தன்னார்வ நிதி. தேசிய மற்றும் மாநில பேரிடர் நிவாரண நிதிக்காக பட்ஜெட்டில் தனியாக நிதி ஒதுக்கப்படுகிறது என்றார்.

அப்போது தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் துஷ்யந்த் தவே, பி.எம்.கேர்ஸ் நிதி என்று தனியாக நிதியை உருவாக்குவது பேரிடர் மேலாண்மை சட்ட விதிகளுக்கு முரணானது. தேசிய பேரிடர் நிவாரண நிதி அரசின் தலைமை தணிக்கையாளரால் தணிக்கை செய்யப்படுகிறது. ஆனால் பி.எம்.கேர்ஸ் நிதி தனியார் தணிக்கையாளர்களால் தணிக்கை செய்யப்படுவதாக அரசே கூறியிருக்கிறது என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

இந்நிலையில் பி.எம்.கேர்ஸ் நிதியை தேசிய பேரிடர் நிவாரண நிதியத்துக்கு மாற்றக்கோரிய மனுவினை, தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு இன்று உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அறிவித்த தீர்ப்பில், பி.எம் கேர்ஸ் நிதி அறக்கட்டளை மூலம் பெற்ற நிதியை தேசிய பேரிடர் நிதிக்கு மாற்ற மத்திய அரசுக்கு உத்தரவு ஏதும் பிறப்பிக்க முடியாது. தனிநபர்கள் தாமாக முன்வந்து அளிக்கும் நன்கொடைகள் எப்போதும் தேசிய பேரிடர் நிதிக்குத்தான் செல்கின்றன. பேரிடர் மேலாண்மைச் சட்டத்தில் அதற்கு எந்தவிதமான தடையும் இல்லை. மேலும், தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் கொரோனா வைரஸ் பரவலைச் சமாளிக்க மத்திய அரசு வகுத்த திட்டங்கள் போதுமானதாக இருக்கின்றன. புதிதாக எந்தத்திட்டமும் தேவையில்லை. பி.எம் கேர்ஸ் நிதி அறிக்கட்டளை மூலம் திரட்டப்பட்ட நிதி முற்றிலும் மாறுபட்டது. ஒருவேளை தேசிய பேரிடர் நிதிக்கு மாற்ற வேண்டும் என மத்திய அரசு விரும்பினால் அதற்கு எந்தவிதமானத் தடையும் இல்லை என்று அதில் தெரிவித்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com