ஈரான்-இஸ்ரேல் இடையே போர் பதற்றம் அதிகரிப்பு: உணவு பொருட்களின் விலை உயரும் அபாயம் - வெளியுறவுத்துறை மந்திரி

வளர்ந்த நாடாக இந்தியா மாற வேண்டும் என்பது தான் எங்களின் குறிக்கோள் என்று வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பெங்களூரு,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி இந்திய நிறுவன செயலாளர்கள் அமைப்பு சார்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி பெங்களூருவில் நேற்று நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், "ஈரான், இஸ்ரேல் இடையே ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல் மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. உலகின் எந்த பகுதியிலும் இரு நாடுகள் இடையே பதற்றம் ஏற்பட்டால் அது உலக நெருக்கடி நிலையை ஏற்படுத்தும். இத்தகைய பதற்றம் கச்சா எண்ணெய் விலை, உணவு பொருட்கள் விலையை உயர செய்யும். இதற்கு 'விஸ்வ பந்து' முறை தான் ஒரே தீர்வு.

ஈரான், இஸ்ரேல் இடையே போர் பதற்றத்தை தணிக்க தேவையான நடவடிக்கை எடுக்கும்படி எனக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார். ஈரானில் சிக்கியுள்ள கப்பலில் இருக்கும் இந்திய மாலுமிகள் 17 பேரை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுத்துள்ளோம். ஈரான், இஸ்ரேல் மண்டலத்தில் சுமார் 18 லட்சம் இந்தியர்கள் வாழ்கிறார்கள். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மத்திய அரசின் கடமை. அதை நாங்கள் செய்கிறோம்.

இந்திய பசிபிக் கடல் பகுதியில் நிலவும் சூழல் கவலை அளிப்பதாக உள்ளது. அந்த பகுதியில் 20 நாடுகள் உள்ளன. அந்த நாடுகள் ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்வது இல்லை. இத்தகைய சவால்களை எதிர்கொள்ள ஒரு அனுபவம் வாய்ந்த தலைவர் நமக்கு தேவை. ஒருதலைபட்சமான அணுகுமுறை, பிரச்சினையை தீர்க்க உதவாது. உலக பிரச்சினைகளுக்கு இந்தியா ஜி20 நாடுகளுக்கு தலைமை தாங்கியபோது குரல் கொடுத்தது.

வளர்ந்த நாடாக இந்தியா மாற வேண்டும் என்பது தான் எங்களின் குறிக்கோள். அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா 5 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ.420 லட்சம் கோடி) பொருளாதார பலமிக்க நாடாக மாறும். 2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் பொருளாதார பலம் 10 டிரில்லியனாக (ரூ.840 லட்சம் கோடி) அதிகரிக்கும். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக வேண்டும்" என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com