ஜி-20 சின்னம் விவகாரம்; தாமரை மலரை பயன்படுத்த மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடியுடன் சந்திப்பு கிடையாது என மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி திட்டவட்டமுடன் கூறியுள்ளார்.
ஜி-20 சின்னம் விவகாரம்; தாமரை மலரை பயன்படுத்த மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு
Published on

புதுடெல்லி,

ஜி-20 உச்சி மாநாடு இந்தோனேசியாவின் பாலி நகரில் கடந்த நவம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடந்தது. 2-வது நாள் நடந்த பாலி மாநாட்டு நிறைவு விழாவில் ஜி-20 தலைமைத்துவம் இந்தியாவிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.

இதன் நிறைவு விழாவில் பேசிய பிரதமர் மோடி, ஜி-20 தலைமையை இந்தியா ஏற்று நடத்துவது என்பது ஒவ்வோர் இந்தியருக்கும் பெருமை அளிக்கும் விசயம். இந்தியாவில் வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் நகரங்களில் ஜி-20 கூட்டங்களை நாங்கள் நடத்துவோம்.

நாம் அனைவரும் இணைந்து ஜி-20 அமைப்பை உலகளாவிய மாற்றத்திற்கான ஒரு வினையூக்கியாக உருவாக்குவோம் என கூறினார். இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவம் எல்லாவற்றையும் உள்ளடக்கிய, குறிக்கோள் நிறைந்த, முடிவான மற்றும் செயல் சார்ந்து இருக்கும் என்று கூறினார்.

அடுத்த ஓராண்டில், உறுப்பு நாடுகளின் கூட்டு நடவடிக்கைக்கு தூண்டுதல் அளிக்கும் வகையிலான, சர்வதேச முதன்மை இயக்கம் ஆக ஜி-20 அமைப்பை பணியாற்றும் வகையில் செய்வது எங்களது கடுமையான முயற்சியாக இருக்கும் என்று அவர் கூறினார்.

இந்த மாநாட்டில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் தலைவராக மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொள்கிறார்.

இந்த நிலையில், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, டெல்லியில் ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடியுடன் சந்திப்பு எதுவும் கிடையாது. இது ஜி-20 மாநாட்டுக்கான சந்திப்பு மட்டுமே ஆகும்.

நமது தேசிய மலராக தாமரை உள்ளது என்றபோதிலும், அது அரசியல் கட்சி ஒன்றின் சின்னமும் ஆகும். அதனால், ஜி-20 மாநாட்டுக்கான சின்னம் ஆக தாமரை மலர் பயன்படுத்தப்பட கூடாது. அவர்களுக்கு வேறு சில வாய்ப்புகள் உள்ளன என கூறியுள்ளார்.

வாக்களிக்கும் தினத்தில் ஊர்வலம் செல்ல அனுமதி கிடையாது. ஆனால், பிரதமர் மோடி மற்றும் அவரது கட்சியினர் வி.வி.ஐ.பி.க்கள். அவர்கள் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம். அவர்களை மன்னித்து விடுவார்கள் என்று குஜராத் சட்டசபை தேர்தல் பற்றி மம்தா பானர்ஜி குறிப்பிட்டு பேசினார்.

இதன்பின்பு, வருகிற டிசம்பர் 12 முதல் 14 ஆகிய தேதிகளில் 3 நாட்கள் மேகாலயாவில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்று மேற்கு வங்காள அரசியல் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com