

கட்சிரோலி,
கட்சிரோலி மாவட்டத்தில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இங்குள்ள போரியா வனப்பகுதியில் பல ஆண்டுகளாகவே நக்சலைட்டுகளின் நடமாட்டம் இருந்து வருகிறது. இந்த வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருக்கும் இடம் குறித்து நக்சலைட்டு தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்த வனப்பகுதிகளில் சிறப்பு கமாண்டோ படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட கமாண்டோ போலீசார் மீது காட்டில் பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் துப்பாக்கியால் சுட்டனர். உடனே சுதாரித்து கொண்ட போலீசார் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர்.
இருதரப்பினருக்கும் பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது. ஒரு கட்டத்தில் போலீசாரின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் நக்சலைட்டுகள் தப்பி ஓட்டம்பிடித்தனர். நக்சலைட்டுகள் தரப்பில் இருந்து அமைதி திரும்பிய நிலையில், போலீசார் அடர்ந்த காட்டுக்குள் சென்று தீவிர சோதனை போட்டனர்.
அப்போது அங்கு துப்பாக்கி குண்டு துளைத்து பல நக்சலைட்டுகள் பிணமாக கிடந்தனர். மொத்தம் 37 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், இந்திராவதி நதிப்பகுதியில் இருந்து மேலும், 2 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன்மூலம், பலி எண்ணிக்கை 39 ஆக அதிகரித்து உள்ளது.