

புதுடெல்லி,
பஞ்சாபில் ஆம் ஆத்மியின் மாநிலங்களவை எம்.பி. ராகவ் சத்தா, உள்கட்சிப் பூசல் காரணமாக, நேற்று முன் தினம் பாஜகவில் இணைந்தார். அவருடன் சேர்த்து ஹர்பஜன் சிங் உள்பட மொத்தம் 7 ஆம் ஆத்மி எம்.பி.க்கள் பாஜகவில் இணைந்தனர். கட்சி தாவிய ஏழு பேரும் துரோகிகள் என்று பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் கூறியிருந்தார்.
இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த மறுநாளே, அக்கட்சியின் தொண்டர்கள் நேற்று இரவு ஹர்பஜன் சிங்கின் வீட்டிற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்கள் கறுப்பு மையால் துரோகி என்கிற வாசகத்தை வீட்டுச் சுவர்களில் எழுதினர்.
மேலும், பல கட்சித் தொண்டர்கள் தங்கள் கண்களில் கறுப்புத் துணிகளைக் கட்டிக்கொண்டு அவரது இல்லத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜலந்தரில் உள்ள அவரது வீட்டில் இவ்வாறு எழுதப்பட்ட நிலையில் அவர் வீட்டில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 2022-ல் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹர்பஜன் சிங், இந்தப் போராட்டத்தின் போது வீட்டில் இல்லை என்று கூறப்படுகிறது.