

டெல்லி,
தலைநகர் டெல்லியின் அசாத்பூர் மண்டி பகுதியை சேர்ந்தவர் முன்ஜன் கேவாட். காய்கறி வியாபாரியான இவருக்கு திருமணமாகி அனிதா (வயது 27) என்ற மனைவியும் 3 குழந்தைகளும் (குழந்தைகள் வயது 5,4,3) இருந்தனர்.
இதனிடையே, சூதாட்டத்திற்கு அடிமையான கேவாட் பலரிடம் கடன் வாங்கி சூதாடியுள்ளார். இதில் பணத்தை அவர் இழந்துள்ளார். இதையடுத்து, பணத்தை கடன் கொடுத்தவர்கள் கேவாட் இடம் கேட்டுள்ளனர். மேலும், அவரின் கடன் அதிகரித்துள்ளது. இதனால் குடும்பத்தினரை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்ய கேவாட் முடிவெடுத்துள்ளார்.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை கேவாட் தனது மனைவி அனிதா மற்றும் 3 குழந்தைகளை கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர், வீட்டை விட்டு வெளியேறிய கேவாட் ரெயில் மூலம் ராஜஸ்தான் தப்பிச்சென்றுள்ளார்.
மனைவி, 3 குழந்தைகளை கொலை செய்துவிட்டு கேவாட் தப்பிச்சென்றது குறித்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், 4 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், 4 பேரையும் கொலை செய்துவிட்டு தப்பிச்சென்ற கேவாட்டை ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கேவாட்டிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.