'ஹனிடிராப்' முறையில் வாலிபர்களை குறிவைத்து நகை, பணம் பறித்த கும்பல்: 5 பேர் அதிரடி கைது

பாதிக்கப்பட்ட வாலிபர் சம்பவம் பற்றி போலீசில் புகார் அளித்தார்.
'ஹனிடிராப்' முறையில் வாலிபர்களை குறிவைத்து நகை, பணம் பறித்த கும்பல்: 5 பேர் அதிரடி கைது
Published on

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் தாவணகெரே (மாவட்டம்) புறநகர் பகுதியை சேர்ந்த தொழில் அதிபருக்கு 25 வயதில் ஒரு மகன் இருக்கிறார். இந்த வாலிபருக்கு ஒரு பெண் அறிமுகமாகியுள்ளார். அந்த வாலிபருடன் அந்த பெண் நெருங்கி பழகியதுடன், தன்னுடன் உல்லாசம் அனுபவிக்கலாம் என ஆசை வார்த்தைகளை கூறி ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு வைத்து அந்த பெண், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வாலிபரை மிரட்டி செல்போனில் தன்னுடன் நெருக்கமாக இருப்பதுபோல் படம் பிடித்து வைத்துக் கொண்டு ஹனிடிராப் முறையில் மிரட்டி பணம், நகைகளை பறித்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட வாலிபர் சம்பவம் பற்றி தாவணகெரே புறநகர் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, ஹனிடிராப் கும்பலை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 4 பேரை பொறி வைத்து பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், கைதானவர்கள் தாணகெரேயை சேர்ந்த பஞ்சமி, ஜெகதீஷ், கங்கா மல்லேஷ் நாயக், வெங்கடேஷ் ஆகிய 4 பேர் என்ப தும், இவர்கள் 4 பேரும் பணக்கார வாலிபர்களை குறிவைத்து ஹனிடிராப் முறையில் நகை- பணத்தை பறித்து வந்தது தெரியவந்தது.

மேலும் பஞ்சமி தான் வாலிபர்களை தொடர்புகொண்டு உல்லாசம் அனுபவிக்கலாம் என ஆசை வார்த்தைகள் கூறி அழைத்து சென்று தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து நகை-பணத்தை பறித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து கைதான 4 பேரிடம் இருந்தும் ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 80 கிராம் தங்க நகைகள், ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த மோசடி கும்பல் பல வாலிபர்களை ஹனிடிராப் முறையில் நகை, பணம் பறித்ததும் தெரியவந்துள்ளது. கைதானவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சுரேஷ் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக கைதான 5 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com