

அரித்துவார்,
வடமாநிலங்களில் கங்கா தசரா திருவிழாவை மக்கள் புனித நீராடி கொண்டாடுவது வழக்கம். நாடு முழுவதும் இந்த ஆண்டு கொரோனா 2வது அலையில் தீவிர பாதிப்புகள் ஏற்பட்ட சூழலில், பெருமளவில் கடந்த ஆண்டை போலவே கோவில் திருவிழாக்கள் பக்தர்கள் இன்றி நடந்து முடிந்தன.
எனினும், கும்பமேளா உள்ளிட்டவற்றில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி மகிழ்ந்தனர். கடந்த மார்ச்சில் நடந்த இந்நிகழ்ச்சியில், கொரோனா விதிகள் சரிவர பின்பற்றப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
அதில், அகோரிக்களும் கலந்து கொண்டனர். அவர்களில் சில குழுக்களை சேர்ந்த தலைவர்களுக்கு பாதிப்பும் ஏற்பட்டது. அகோரி குழுவின் தலைவர் ஒருவர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவங்களும் நடந்தன.
இதனை தொடர்ந்து கடந்த ஏப்ரலில், கொரோனா பாதிப்புகள் உச்ச நிலையை அடைந்தன. இந்நிலையில், வடமாநிலங்களில் கொண்டாடப்பபடும் கங்கா தசராவை முன்னிட்டு உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் சமூக இடைவெளியை மறந்து மக்கள் புனித நீராடலில் ஈடுபட்டு உள்ளனர்.
இதுபற்றி வட்ட அதிகாரி கூறும்பொழுது, வீடுகளிலேயே புனித நீராடும்படி மக்களிடம் நாங்கள் கேட்டு கொண்டுள்ளோம். கொரோனா பாதிப்பு இல்லை என்பதற்கான ஆர்.டி.-பி.சி.ஆர். சான்றிதழ்கள் வைத்திருப்பவர்களை மட்டுமே எல்லை பகுதியில் நாங்கள் அனுமதிக்கிறோம். கொரோனா விதிகளை பின்பற்றும்படி மக்களை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம் என கூறியுள்ளார்.
3வது அலை இந்தியாவை பாதிக்க கூடிய சாத்தியம் உள்ளது என நிபுணர்கள் கூறும் சூழலில், கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க கூடிய வகையில் கொரோனா விதிகளை மீறி மக்கள் ஒரே இடத்தில் குவிந்துள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.