

மும்பை,
மும்பையை சேர்ந்த பிரபல பத்திரிகையாளர் ஜோதிர்மயி டே, கடந்த 2011-ம் ஆண்டு ஜூன் மாதம் மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களால், கொடூரமாகச் சுட்டுக் கொல்லப்பட்டார். நிழலுலக தாதா சோட்டா ராஜனின் தூண்டுதலின்பேரில்தான் இந்தக் கொலை சம்பவம் அரங்கேறியதாக கூறப்படுகிறது. இது பெரும் அதிர்ச்சியை மும்பையில் ஏற்படுத்தியது. இந்தக் கொலை தொடர்பான வழக்கு விசாரணை, மகாராஷ்டிரா திட்டமிட்ட குற்ற வழக்குகளை விசாரிக்கும் தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த கொலை சம்பவம் தொடர்பாக மும்பை குற்றத்தடுப்பு அமைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜிக்னாவோரா, என்ற பெண் நிருபர் உள்பட 11 பேரை கைது செய்தனர். மும்பை குற்றத்தடுப்பு சிறப்பு கோர்ட்டில் நடந்து வரும் இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் 3-ம் தேதி 155 சாட்சிகளிடம் விசாரணை நடந்து முடிந்தது.
இந்த கொலை தொடர்பாக 2016-ம் ஆண்டு சி.பி.ஐ. விசாரணை நடத்தியதில் தாவூத் கூட்டாளியான சோட்டா ராஜன் தூண்டுதலில் இந்த கொலை சம்பவம் நடந்ததும் தெரியவந்தது. இந்த வழக்கை, மும்பையில் உள்ள கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் விசாரித்து வந்தது. இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், சோட்டா ராஜன் குற்றவாளி என தீர்ப்பளித்தது. அதேபோல், இந்த வழக்கில் இருந்து ஜோஷப் பால்சன் மற்றும் ஜிக்னோ வோரா ஆகியோரை விடுவித்தும் தீர்ப்பளித்தது.