

புதுச்சேரி,
புதுச்சேரி அடுத்த காரைக்கால் மாவட்டத்திற்கு உட்பட்ட வடக்கு வாஞ்சூர் பகுதியில் தனியார் ரசாயன தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த ரசாயன தொழிற்சாலையில் இன்று ரசாயன வாயு உற்பத்தி செய்யும் இடத்தில் திடீரென வாயு கசிவு ஏற்பட்டது. தொடர்ந்து அந்த தொழிற்சாலையில் திடீரென வெடிப்பு ஏற்பட்டு பயங்கர தீவிபத்தாக மாறியது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அந்த ரசாயன தொழிற்சாலை அருகே உள்ள கிராமத்தில் வசித்து வரும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.
இதனிடையே அங்கு சுமார் 10-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயு கசிவு மற்றும் வெடி விபத்து தொடர்பாக மாவட்ட நிர்வாகம் முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளது. இந்த விசாரணை முடிந்த பிறகே விபத்திற்கான காரணம் தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.