

புதுடெல்லி,
பெங்களூருவை சேர்ந்த மூத்த பத்திரிகையாளரும், சமூக ஆர்வலருமான கவுரி லங்கேஷ் செவ்வாய் இரவு சுட்டுக்கொல்லப்பட்டார்.
தைரியமிக்க பத்திரிக்கையாளரான இவர் மதவாதத்திற்கு எதிராக தொடர்ந்து எழுதியவர். பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலைக்கு பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலைக்கு பாரதீய ஜனதா கண்டனம் தெரிவித்து உள்ளது. ஆனால் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் கொலை செய்யப்பட்ட போது இவ்வளவு கோபம் எழாதது ஏன்? என கேள்வி எழுப்பி உள்ளது.
கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு மீது தாக்குதலை தொடுத்த மத்திய சட்டமந்திரி ரவிசங்கர் பிரசாத், பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ்க்கு பாதுகாப்பு வழங்கப்படாதது ஏன்? கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் கொல்லப்பட்ட போது இவ்வளவு கோபம் எழாதது ஏன்? என கேள்விகளை எழுப்பி உள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ரவிசங்கர் பிரசாத், பத்திரிக்கையாளர், சமூக ஆர்வலர் கவுரி லங்கேஷ் கொலைக்கு கண்டனம் தெரிவித்தார்.
மாவோயிஸ்ட்கள் சரண் அடையவேண்டும் என அவர்களுடன் பணியாற்றி உள்ளார். இதனை மாநில அரசின் அனுமதியுடன் செய்தாரா? அவருக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படாதது ஏன்? கர்நாடக அரசின் பாதுகாப்பு குறைபாடு ஏன்? என கேள்வி எழுப்பினார் ரவிசங்கர் பிரசாத்.
தாராளவாதிகளின் கபடம், இரட்டை நிலைபாடு என கூறிஉள்ள ரவிசங்கர் பிரசாத், கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் கொல்லப்பட்ட போது அவர்கள் அமைதியாக இருந்தது ஏன்? அவர்களிடம் மனித நேயம் கிடையாது? என கேள்வி எழுப்பினார். கவுரி லங்கேஷ் கொலையின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதீய ஜனதா என இருக்கிறது என ராகுல் காந்தி சுட்டிக்காட்டியதை விமர்சனம் செய்த ரவிசங்கர் பிரசாத், இவர்கள்தான் குற்றவாளி என ராகுல் காந்தி ஏற்கனவே கூறிவிட்டதால், நாங்கள் உண்மையான விசாரணையை எதிர்பார்க்க முடியுமா? எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்.
கன்னட எழுத்தாளர் எம்.எம்.கல்புர்கி கொல்லப்பட்ட விவகாரத்தில் தொய்வான விசாரணை தொடர்பாகவும் கர்நாடக அரசினை விமர்சனம் செய்தார் ரவிசங்கர் பிரசாத்.