உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 38-வது இடத்துக்கு சரிந்தார் அதானி

தனது குழுமத்தின் சரிவால் உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் வெகுவாக கீழிறங்கியுள்ளார் அதானி. அவர் தற்போது 38-வது இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 38-வது இடத்துக்கு சரிந்தார் அதானி
Published on

அதானி குழுமத்தின் தலைவரான குஜராத்தைச் சேர்ந்த கவுதம் அதானி, தனது தொழில் சாம்ராஜ்யத்தை விறுவிறுவென்று விரிவுபடுத்தினார். அதனால் குறுகிய காலத்தில் உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 2-வது இடம் வரை முன்னேறினார்.

ஹிண்டன்பர்க் அறிக்கை

இந்நிலையில் அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறது, அந்தக் குழுமத்துக்கு மிக அதிகமான கடன் உள்ளது என்று அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் கடந்த மாதம் அறிக்கை வெளியிட்டது. அது அதானி குழுமத்துக்கு பலத்த அடியாக அமைந்தது.

அந்த குழும நிறுவனங்களின் பங்குகள் சரசரவென்று சரிந்து வருகின்றன. குறிப்பாக, அதானி டோட்டல் கியாஸ், அதானி டிரான்ஸ்மிசன், அதானி கிரீன் எனர்ஜி, அதானி என்டர்பிரைசஸ், அதானி பவர், என்.டி.டி.வி. பங்குகள் பின்னடைவை எதிர்கொண்டுள்ளன.

2 ஆண்டுகளில் இல்லாத சரிவு

அதன் விளைவாக, கவுதம் அதானி கடந்த ஒரு மாத காலத்தில் தனது சொத்து மதிப்பில் சுமார் 80 பில்லியன் டாலர்களை இழந்துள்ளார். தற்போது அவரது மொத்த சொத்து மதிப்பு 39.9 பில்லியன் டாலர்களாக உள்ளது. ஏறக்குறைய இதே அளவு சொத்து மதிப்பைத்தான் அதானி கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கொண்டிருந்தார். ஆக கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத சரிவை அதானி சந்தித்திருக்கிறார்.

38-வது இடத்தில்

தனது குழுமத்தின் சரிவால் உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் வெகுவாக கீழிறங்கியுள்ளார் அதானி. அவர் தற்போது 38-வது இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.

கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது அதானியின் சொத்து மதிப்பு 4.4 சதவீதம் குறைந்துள்ளது. அதாவது 160 கோடி டாலர் குறைந்திருக்கிறது. இதற்கு, நேற்றைய தினம் பங்குச்சந்தையில் அதானி குழும பங்குகள் இழப்பில் இருந்து வந்ததும் காரணம்.

முகேஷ் அம்பானி

அதானி தொடர் பாதிப்பை சந்தித்துவரும் நிலையில், அவரது போட்டியாளரான ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு நிலையாக உள்ளது. இருவருக்கும் இடையிலான சொத்து மதிப்பு வித்தியாசம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு அதானியைவிட இரு மடங்கு அதிகரித்துள்ளது. முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 8 ஆயிரத்து 360 கோடி டாலராக உள்ளது. தற்போது அவர் உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com