ஈரானில் இருந்து விரைவாக வெளியேறுங்கள்: இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

தூதரகத்திடம் ஆலோசனை செய்யாமல், ஒருங்கிணைந்து செயல்படாமல் எந்தவித சர்வதேச நில எல்லையையும் அணுக முயற்சிக்க வேண்டாம் என்று வலியுறுத்தி உள்ளது.

ஈரானில் இருந்து விரைவாக வெளியேறுங்கள்:  இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
Published on

புதுடெல்லி

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி வான்வழியே கடுமையாக தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து 6 வாரங்களாக நடந்த தாக்குதலில், ஈரானில் ஆண்கள், பெண்கள் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்தது.

இந்நிலையில், ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் திறக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வலியுறுத்தினார். மீறினால், ஈரானின் அணு உலைகளை தாக்குவோம் என்றும் கூறினார். இதற்காக ஈரானுக்கு, அமெரிக்கா காலக்கெடு விதித்தது. அதனை நீட்டித்தும் வந்தது. ஆனால், அந்த காலக்கெடு நேற்றிரவு 8 மணி வரையே நீடிக்கும் என டிரம்ப் கூறினார்.

அதன்பின்னர் ஈரான் உடன்படவில்லை எனில் கடுமையான தாக்குதல் இருக்கும் என கூறினார். இதனை தொடர்ந்து, ஈரானிலுள்ள இந்திய தூதரகம் நேற்று வெளியிட்ட செய்தியில், அடுத்த 48 மணிநேரத்திற்கு இந்தியர்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்களோ, அந்த இடத்திலேயே இருங்கள். அனைவரும் வீட்டிலேயே தங்கியிருங்கள். அடுக்குமாடி கட்டிடங்களில் மேல் தளத்தில் இருக்க வேண்டாம் என்றும் அதனை தவிர்க்கும்படியும் அறிவுறுத்தியது. அதிகாரப்பூர்வ தகவல்களை அனைவரும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டது.

இந்நிலையில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே 2 வார காலத்திற்கு போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளது. இந்த சூழலில், போரால் பாதிக்கப்பட்ட ஈரான் நாட்டில் இருந்து விரைவாக வெளியேறும்படி, இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

இதுபற்றி ஈரானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட செய்தியில், தூதரகத்திடம் ஆலோசனை செய்யாமல், ஒருங்கிணைந்து செயல்படாமல் எந்தவித சர்வதேச நில எல்லையையும் அணுக முயற்சிக்க வேண்டாம் என்று வலியுறுத்தி உள்ளது. ஏற்கனவே பரிந்துரைத்த வழிகளை பயன்படுத்தி ஈரானை விட்டு இந்தியர்கள் வெளியேற வேண்டும் என்று இந்திய தூதரகம் கேட்டு கொண்டுள்ளது.

இதற்காக அவசரகால தொடர்பு எண்களையும் தூதரகம் அறிவித்து உள்ளது. இதன்படி, +989128109115; +989128109109; +989128109102; +989932179359 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளும்படியும், cons.tehran@mea.gov.in என்ற இ-மெயில் முகவரியை தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com