கணவன் இறந்தபின் விபசாரம்.. 10 வயது மகளையும் சீரழித்து சித்ரவதை செய்த பெண்

சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தாயார் மற்றும் தாயாரின் நண்பரை கைது செய்தனர்.
கணவன் இறந்தபின் விபசாரம்.. 10 வயது மகளையும் சீரழித்து சித்ரவதை செய்த பெண்
Published on

புதுடெல்லி:

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி, கடந்த ஜனவரி மாதம் 20-ம் தேதி டெல்லியில் தெருக்களில் தனியாக சுற்றித்திரிந்தார். இதைப் பார்த்த சிலர் அந்த சிறுமியை போலீசில் பாதுகாப்பாக ஒப்படைத்தனர்.

சிறுமியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தன் தாயின் கள்ளக்காதலன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அந்த குற்றத்தை மறைப்பதற்காக தொடர்ந்து சித்ரவதை செய்வதாகவும் கூறி அழுதுள்ளார். பின்னர் சிறுமியை குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைத்தனர். மேலும், சிறுமிக்கு உடனடியாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது.

விசாரணையின்போது அந்த சிறுமி அளித்த வாக்குமூலம் நெஞ்சை உலுக்குவதாக இருந்தது. சிறுமி கூறியதாவது:-

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு என் தந்தை இறந்துவிட்டார். அதன்பிறகு தாய்வழி தாத்தா பாட்டியுடன் வசித்து வந்தேன். கடந்த ஆண்டு, என் தாயார் காசியாபாத்தில் உள்ள வீட்டிற்கு என்னையும், என் அண்ணனையும் அழைத்துச் சென்றார். அங்கு தாயின் நண்பர் என்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தார். என் 13 வயது சகோதரனையும் அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். இந்த கொடுமை காரணமாக என் அண்ணன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டான்.

என் தந்தையின் மரணத்திற்குப் பிறகு தாயார் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் என்பதும் தெரியவந்தது. அவருக்கு வயதாகும்போது என்னையும் அந்த தொழிலில் தள்ள விரும்பினார். அவர்களின் கொடுமை தாங்காமல் நானும் வீட்டை விட்டு வெளியேறிவிட்டேன்.

இவ்வாறு சிறுமி கூறியுள்ளார்.

சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, சிறுமியின் தாயார் மற்றும் தாயாரின் நண்பரை கைது செய்தனர்.

இதுதொடர்பாக காவல்துறை உதவி ஆணையர் (லோனி), கூறியதாவது:

குற்றவாளி ராஜூவை சிறுமி அடையாளம் காட்டினார். ஜனவரி 20-ம் தேதி சிறுமி காணாமல் போன பிறகும், காணாமல் போனதாக தாய் புகார் அளிக்கவில்லை. குற்றத்தை மறைக்க தனது தாயும் ராஜூவும் தன்னை சித்ரவதை செய்வதாகவும், இதைப் பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்பதற்காக கட்டிங் பிளையரை காட்டி மிரட்டுவதாகவும் அந்த சிறுமி கூறினாள்.

முதலில், ஜனவரி மாதம் டெல்லி காவல்துறையினரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் கடந்த 9-ம் தேதி லோனி பார்டர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com