புதிய கட்சியை அறிவித்தார் குலாம்நபி ஆசாத்

காங்கிரசில் இருந்து வெளியேறியுள்ள குலாம்நபி ஆசாத், புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்தார். கட்சியின் செயல் திட்டத்தையும் வெளியிட்டார்.
புதிய கட்சியை அறிவித்தார் குலாம்நபி ஆசாத்
Published on

குலாம்நபி ஆசாத் ராஜினாமா

காங்கிரஸ் கட்சியில் 50 ஆண்டு காலம் பணியாற்றியவர், அதன் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம்நபி ஆசாத் (வயது 73). இவர், காஷ்மீர் முதல்-மந்திரி, காங்கிரஸ் பொதுச்செயலாளர், மத்திய மந்திரி, நாடாளுமன்ற மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் என பல பதவிகளை வகித்தவர் ஆவார். ராகுல் காந்தி மீது சரமாரியாக குற்றம்சாட்டி, கடந்த 26-ந் தேதி காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து அவருடைய ஆதரவாளர்களான முன்னாள் துணை முதல்-மந்திரி தாராசந்த், முன்னாள் மந்திரிகள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பலரும் காங்கிரசில் இருந்து வெளியேறினார்கள்.

புதிய கட்சி அறிவித்தார்

குலாம்நபி ஆசாத், காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய நிலையில் ஜம்முவில் சைனிக் காலனியில் நேற்று பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக அவர் நேற்று ஜம்மு விமான நிலையத்தில் வந்திறங்கியபோது, அங்கே பெருமளவில் திரண்டிருந்த அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கூட்ட மைதானத்துக்கு அவரை ஊர்வலமாக அழைத்துச்சென்றனர். அதைத்தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் பேசிய குலாம்நபி ஆசாத் புதுக்கட்சி தொடங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

செயல்திட்டம்

தொடர்ந்து அவர் கட்சியின் செயல்திட்டத்தை வெளியிட்டு பேசும்போது கூறியதாவது:- கட்சியின் பெயர் என்ன என்பது குறித்து காஷ்மீர் தலைவர்களுடனும், மக்களுடனும் கலந்து ஆலோசனை நடத்தி முடிவு எடுப்பேன்.

புதிய கட்சி காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்தைப் பெற்றுத்தரவும், காஷ்மீர் மக்களின் நிலத்தைப் பாதுகாக்கவும், மக்களுக்கு வேலைகளைப் பெற்றுத்தரவும், காஷ்மீரை விட்டு வெளியேறிய காஷ்மீர் பண்டிட்டுகள் மீண்டும் காஷ்மீர் திரும்பவும், மறுகுடியமர்த்தப்படவும் கவனம் செலுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com