

கண்ணூர்,
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்துக்கு உட்பட்ட கொட்டியூரில் உள்ள தேவாலயம் ஒன்றில் பாதிரியாராக இருந்தவர் ராபின் மேத்யூ (வயது 51). அங்குள்ள பள்ளியின் நிர்வாகியாகவும் பணியாற்றிய அவர், கடந்த 2016-ம் ஆண்டு அந்த பள்ளியில் படித்த 16 வயது சிறுமி ஒருவரை கற்பழித்தார்.
இதில் கர்ப்பமான அந்த சிறுமிக்கு கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் குழந்தை பிறந்தது. இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பாதிரியார் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. பின்னர் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
அவர் மீது தலசேரி போக்சோ கோர்ட்டில் நடந்த வந்த வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் ராபின் மேத்யூவுக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கில் தவறான சாட்சியம் அளித்த சிறுமியின் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கவும் போலீசாருக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.