தந்தை இறந்த துக்கத்திலும் தேர்வு எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி

தந்தை இறந்த துக்கத்திலும் எஸ்.எஸ்.எல்.சி. மாணவி தேர்வு எழுதினார். அவர் வீடியோகாலில் தந்தையின் இறுதிச்சடங்கை பார்த்தார்.
தந்தை இறந்த துக்கத்திலும் தேர்வு எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி
Published on

சிவமொக்கா:

தந்தை இறந்த துக்கத்திலும் எஸ்.எஸ்.எல்.சி. மாணவி தேர்வு எழுதினார். அவர் வீடியோகாலில் தந்தையின் இறுதிச்சடங்கை பார்த்தார்.

எஸ்.எஸ்.எல்.சி. மாணவி

கர்நாடக மாநிலம் கொப்பலை சேர்ந்தவா அபி பாஷா. இவரதுமகள் அர்ஷியா மனியார் (வயது 15). இவர் சிவமொக்கா மாவட்டம் ஒசநகரில் உள்ள புனித ரிடிமார் என்ற தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி எஸ்.எஸ்.எல்.சி. படித்து வருகிறார். கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த 31-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. மாணவி அர்ஷியா தேர்வு எழுதி வந்தார்.

இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி இரவு 9 மணி அளவில், அர்ஷியாவின் தந்தை அபி பாஷா மாரடைப்பால் இறந்துவிட்டதாக தனியார் பள்ளியின் தலைமை ஆசிரியர் யோகேசுக்கு தகவல் வந்தது. மேலும் மாணவியை அனுப்பி வைக்கும்படி தலைமை ஆசிரியரிடம் அர்ஷியாவின் உறவினர்கள் தெரிவித்தனர்.

தலைமை ஆசிரியரின் திட்டம்

அப்போது மறுநாள், அதாவது 6-ந்தேதி அர்ஷியாவுக்கு தேர்வு இருப்பதாக தலைமை ஆசிரியர் யோகேஷ், அவரது உறவினர்களிடம் தெரிவித்தார். ஆனால், தேர்வு எழுதாவிட்டாலும் பரவாயில்லை, அர்ஷியாவை அனுப்பி வைக்கும்படி அவர்கள் தெரிவித்தனர். ஆனால், மாணவியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தலைமை ஆசிரியர் யோகேஷ், சமயோஜிதமாக சிந்தித்து அர்ஷியாவை கொப்பலுக்கு அழைத்து சென்று தந்தையின் முகத்தை பார்க்க வைத்து திரும்ப ஒசநகருக்கு வந்து தேர்வு எழுத வைக்க முடிவு செய்தார்.

அதாவது, ஒசநகரில் இருந்து கொப்பல் 275 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இதனால் இரவு காரில் அர்ஷியாவை அழைத்து சென்று தந்தையின் முகத்தை பார்க்க வைத்து, உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு ஒசநகருக்கு வந்து தேர்வு எழுத வைக்க வேண்டும் என்பது தான் யோகேசின் திட்டம்.

தந்தையின் உடலை பார்த்து...

இதையடுத்து தலைமை ஆசிரியர் யோகேசின் திட்டப்படி விடுதி வார்டன் சாந்தா நாயக், பண் ஊழியர் சுனிதா மூலம், மாணவி அர்ஷியாவிடம் தந்தை இறந்த தகவலை தெரிவிக்காமல் அவரை ரம்ஜான் நோன்புக்காக வீட்டில் அழைப்பதாக கூறி 5-ந்தேதி இரவு 10 மணிக்கு காரில் கொப்பலுக்கு புறப்பட்டனர். அதிகாலை 3 மணி அளவில் அவர்கள் கொப்பலில் உள்ள அர்ஷியாவின் வீட்டுக்கு சென்றடைந்தனர். அங்கு சென்ற பிறகு தான் தந்தை இறந்த தகவல் அர்ஷியாவுக்கு தெரியவந்தது.

அவர் தந்தையின் உடலை பார்த்து கதறி அழுதார். அவருக்கு உறவினர்கள், விடுதி வார்டன் ஆகியோர் ஆறுதல் கூறி சமாதானப்படுத்தினர். இதையடுத்து மாணவி அர்ஷியாவை அழைத்து செல்ல அவர்கள் முயன்றனர். ஆனால் உறவினர்கள் அர்ஷியாவை அனுப்ப மறுத்தனர்.

மாணவியின் எதிர்காலம்

பின்னர் விடுதி வார்டன் சாந்தா நாயக், பெண் ஊழியர் சுனிதா ஆகியோர் மாணவி அர்ஷியா மற்றும் அவரது குடும்பத்தினரிடம் மாணவியின் எதிர்காலம் குறித்து எடுத்து கூறினர். மாணவியின் எதிர்காலத்துக்கு இந்த தேர்வு மிகவும் முக்கியமானது என்பதை உணர்த்தினர். இதனை உணர்ந்த அர்ஷியாவின் உறவினர்கள் அவரை தேர்வு எழுத அனுமதித்தனர். அர்ஷியாவும் தந்தையின் ஆசையை நிறைவேற்ற தேர்வு எழுத விருப்பம் தெரிவித்தார்.

இதையடுத்து அதிகாலை 5 மணி அளவில் மாணவி அர்ஷியாவை அழைத்து கொண்டு சாந்தா நாயக்கும், சுனிதாவும் ஒசநகர் நோக்கி காரில் புறப்பட்டனர்.

தேர்வு எழுதினார்

பின்னர் காலை 10.30 மணிக்கு அர்ஷியா ஒசநகரில் உள்ள தேர்வு மையத்துக்கு அழைத்து வரப்பட்டார். தேர்வு மைய அதிகாரி சுதாகரிடம் நடந்த விவரங்களை கூறி மாணவி அர்ஷியாவை தேர்வு எழுத அனுமதிக்கும்படி யோகேஷ் வேண்டுகோள் விடுத்தார். அதனை ஏற்ற சுதாகர், மாணவி அர்ஷியாவை தேர்வு எழுத அனுமதி அளித்தார்.

இதையடுத்து தலைமை ஆசிரியர் யோகேஷ், அர்ஷியாவுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் பேசி அவரை தைரியமாகவும், எதையும் நினைத்து கவலைப்படாமல் நன்றாக தேர்வு எழுதும்படி கூறினார். இதையடுத்து மாணவி அர்ஷிதாவும் தந்தை இறந்த துக்கத்திலும் தேர்வை எழுதினார்.

இதற்கிடையே தந்தையின் இறுதிச்சடங்கை அர்ஷியா நேரில் பார்க்க, விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேர்வு எழுதி முடித்து விடுதிக்கு வந்த அர்ஷியா, வீடியோ கால் மூலம் தந்தையின் இறுதிச்சடங்கை பார்த்தார். அப்போது அவர் கண்ணீர் விட்டு கதறி அழுதார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com