

கோழிக்கோடு,
கேரளம் மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் முக்கம் பகுதியை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவர் கடந்த 3-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்று வெகு நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் அவரை பெற்றோர், உறவினர்கள் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர் முக்கம் போலீசில் புகார் கொடுத்தனர்.
அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மாயமான அந்த இளம்பெண், தாமரைச்சேரி பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் வர வழைத்து, அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதுதொடர்பான அறிக்கை தாமரைச்சேரி கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை கோர்ட்டு விசாரித்தபோது, தனது காதலனுடன் செல்ல இளம்பெண் விருப்பம் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட கோர்ட்டு, திருமணம் செய்யும் வயதை கடந்த இளம்பெண், அவரது விருப்பப்படி காதலனுடன் சேர்ந்து வாழ அனுமதி வழங்கியது. இதையடுத்து காதலியை காதலன் அழைத்துக் கொண்டு அங்கிருந்து செல்ல முயன்றார்.
அப்போது இளம்பெண்ணின் குடும்பத்தினர் எப்படியாவது இளம்பெண்ணை மனமாற்றம் செய்து வீட்டிற்கு அழைத்துச் செல்ல முயன்றனர். இதற்கு காதலன், அவரது நண்பர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு கோர்ட்டு வளாகத்தில் இளம்பெண்ணின் உறவினர்கள், நண்பர்கள் என இரு தரப்பினர் இடையே மோதலில் ஈடுபட்டனர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.