நோய் பாதிப்பால் விலகிய காதலி; எரித்து கொன்ற காதலன் - வேதனை வெளியிட்ட தாயார்

அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
சித்ரதுர்கா,
கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டம் இரியூர் தாலுகா கோவர்ஹட்டி கிராமத்தில் வசித்து வந்தவர் வர்ஷிதா (வயது 19). அவர் சித்ரதுர்காவில் உள்ள சமூக நலத்துறை விடுதியில் தங்கி அந்த பகுதியிலுள்ள கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில், சித்ரதுர்காவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அவருடைய பாதி எரிந்த உடல் கண்டெடுக்கப்பட்டது.
இதுபற்றி சி.சி.டி.வி. காட்சிகள் உதவியுடன் போலீசார் நடத்திய விசாரணையில், வர்ஷிதாவை அவரது காதலன் சேத்தனே கொலை செய்து உடலை எரித்தது தெரியவந்தது. கடந்த 14-ந்தேதி ஊருக்கு செல்வதாக விடுதி வார்டனிடம் அவர் கடிதம் கொடுத்திருந்ததும் தெரியவந்தது.
அதனுடன், கல்லூரி சீருடையுடன் செல்போனில் பேசியபடி விடுதியில் இருந்து வெளியேறியது அந்த பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. வர்ஷிதாவும் சேத்தனும் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர். சேத்தன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 3-வது நிலையில் உள்ளார்.
இந்த நிலையில் வர்ஷிதா வேறொரு வாலிபருடன் பழகி வந்திருக்கிறார். இது சேத்தனின் கவனத்திற்கு சென்றது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர், வர்ஷிதாவை கண்டித்துள்ளார். ஆனாலும் அதனை அவர் கேட்கவில்லை. இந்த நிலையில் சம்பவத்தன்று வர்ஷிதாவுக்கு போன் செய்து சேத்தன் வரவழைத்துள்ளார். கோனூருக்கு செல்லலாம் என கூறி அழைத்து சென்றுள்ளார்.
பின்னர் சித்ரதுர்கா அருகே தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வைத்து, வேறொரு நபருடன் பழகுவது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த சேத்தன், வர்ஷிதாவை கடுமையாக தாக்கி உள்ளார். இதில் மயங்கி விழுந்து வர்ஷிதா உயிரிழந்தார்.
இதன்பின்னர், அவரது உடலில் பெட்ரோலை ஊற்றி தீவைத்து எரித்துவிட்டு சேத்தன் அங்கிருந்து தப்பி ஓடியது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து சித்ரதுர்கா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சேத்தனை கைது செய்தனர். அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். அந்த அடிப்படையிலும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் பற்றி மாணவியின் தாயார் ஜோதி கூறும்போது, சேத்தன் என்பவர் வர்ஷிதாவை அழைத்து கொண்டு சென்றான். அவர்களுக்கு இடையேயான விவகாரம் எனக்கு முன்பே தெரிந்திருந்தால், நான் அதில் தலையிட்டு தடுத்து இருப்பேன்.
அவளை ஒரு ஆண் போன்று பார்த்து வளர்த்து வந்தேன். அவளுக்கு சிறந்த கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக எல்லா வேலைகளையும் செய்து வந்தேன் என்று வேதனை தெரிவித்து உள்ளார். திப்பிசாமி, ஜோதி தம்பதியின் மகளான வர்ஷிதா பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில், சேத்தன் என்பவர் ஓராண்டாக அவருடன் பழகி வந்த நிலையில், இந்த படுகொலை நடந்துள்ளது.
இதனை தொடர்ந்து சித்ரதுர்கா நகரில் மாணவர்கள், பெண்கள் மற்றும் பல்வேறு குழுவினர், அந்த மாணவியின் குடும்பத்தினருக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.






