உங்களுக்கு சேவையாற்ற வாய்ப்பு தாருங்கள் - பிரியங்கா காந்தி பேச்சு


உங்களுக்கு சேவையாற்ற வாய்ப்பு தாருங்கள் - பிரியங்கா காந்தி பேச்சு
x
தினத்தந்தி 23 Oct 2024 1:07 PM IST (Updated: 23 Oct 2024 1:13 PM IST)
t-max-icont-min-icon

வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார்.

வயநாடு,

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்டார். இந்த 2 தொகுதிகளிலும் ராகுல்காந்தி அபார வெற்றி பெற்றார். அதேவேளை, ராகுல் காந்தி ஏதேனும் ஒரு தொகுதியில் எம்.பி. பதவியை ராஜினாமா செய்வார் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, வயநாடு எம்.பி. பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்தார். இதையடுத்து, வயநாடு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, அங்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து வயநாடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் அறிவித்தது.

இதன் மூலம் பிரியங்கா காந்தி முதல் முறையாக தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். வயநாடு தொகுதிக்கு வரும் நவம்பர் 13-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. வயநாடு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக பிரியங்கா காந்தி தனது தாய் சோனியா காந்தியுடன் நேற்று இரவு வயநாட்டுக்கு வந்தார்.

இந்த நிலையில் பிரியங்கா காந்தி இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். இதற்காக தனது சகோதரர் ராகுல் காந்தியுடன் அவர் ரோடு ஷோ (வாகன அணிவகுப்பு) நடத்தினார். அப்போது அங்கு நடைபெற்ற காங்கிரஸ் பரப்புரை கூட்டத்தில் உரையாற்றிய பிரியங்கா காந்தி, "35 ஆண்டுகளாக பிரசாரம் செய்து வருகிறேன். 17 வயதில் எனது தந்தைக்காக வாக்கு சேகரித்தேன்.

பலமுறை கட்சி நிர்வாகிகளுக்காக பரப்புரை செய்துள்ளேன். முதல்முறையாக இப்போது எனக்காக பரப்புரை செய்கிறேன். உங்களுக்கு சேவையாற்ற எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். உண்மையும், அகிம்சையும் எனது சகோதரர் ராகுல் காந்தியை அன்பிற்காகவும், ஒற்றுமைக்காகவும் இந்தியா முழுவதும் 8,000 கிமீ நடைபயணம் மேற்கொள்ள தூண்டியது.

உங்கள் ஆதரவு இல்லாமல் அவரால் அதைச் செய்திருக்க முடியாது. நீங்கள் அவருடன் இருந்தீர்கள். தொடர்ந்து போராடுவதற்கு உங்கள் பலத்தையும் தைரியத்தையும் கொடுத்தீர்கள்" என்று கூறினார். இன்னும் சற்று நேரத்தில் அவர் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story