வங்கி கணக்குகள் முடக்கம் ஜனநாயக விரோதம் - காங்கிரஸ்

ஜனநாயகத்தை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.
வங்கி கணக்குகள் முடக்கம் ஜனநாயக விரோதம் - காங்கிரஸ்
Published on

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. தேர்தல் நேரத்தில் முடக்கப்பட்டுள்ளது அக்கட்சிக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தநிலையில், டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,  சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது  ராகுல்காந்தி கூறுகையில், 

நாட்டின் மிகப்பெரிய அரசியல் கட்சியான காங்கிரசின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டது ஜனநாயக விரோத செயல். காங்கிரஸ் கட்சியின் மீதான கிரிமினல் நடவடிக்கை. பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி ஆகியோரால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்றைய இந்தியாவில் ஜனநாயகம் என்பது இல்லை. இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்பது பொய். இது முற்றிலும் பொய்.

தேர்தலில் எங்களை முடக்க திட்டமிட்டுள்ளனர். ஒரு குடும்பத்தின் வங்கி கணக்கு முடக்கப்பட்டால், அந்த குடும்பம் பஞ்சத்தால் பாதிக்கப்படும், அந்த நிலைதான் காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ளது. முதன்மை எதிர்க்கட்சியான காங்கிரசின் நிதியை முடக்கியது நன்கு திட்டமிடப்பட்ட தாக்குதல்.பொருளாதார ரீதியாக காங்கிரஸ் கட்சியை ஒடுக்க நினைக்கிறார்கள். இது காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் அல்ல. இது இந்திய ஜனநாயத்தின் முடக்கம். இது ஜனநாயத்தின் மீதான தாக்குதல் ஆகும்.

வேட்பாளர்களுக்கு பணம் கொடுக்கவும், விளம்பரம் செய்யவும் கூட எங்களிடம் பணம் இல்லை. எங்களது தலைவர்களை எங்கும் அனுப்ப முடியவில்லை. ஜனநாயகத்தை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். நீதிமன்றங்களும் தேர்தல் ஆணையமும் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையை தடுக்கவில்லை என்றார்.

சோனியா காந்தி கூறுகையில்,

மக்களிடம் இருந்து காங்கிரஸ் பெற்ற நிதியை முடக்கியது ஜனநாயக விரோத செயல். இந்த சவாலான சூழ்நிலையிலும் தேர்தல் பிரசாரம் திறப்பட செய்ய எங்களால் முடிந்தவற்றை செய்கிறோம்.காங்கிரஸ் வங்கி கணக்குகளை முடக்கி தேர்தலில் போட்டியிட முடியாமல் தடுக்கிறது என்றார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில்,

மத்திய பா.ஜ.க அரசு தேர்தல் நன்கொடை பத்திரங்கள் மூலம் அதிக நிதியை பெற்றுள்ளது . மக்களவை தேர்தல் நேர்மையாகவும், நம்பகத்தன்மையுடனும் நடைபெற வேண்டும். எந்தெந்த நிறுவனங்கள் மூலம் எவ்வளவு நிதி பெற்றார்கள் என்பதை பா.ஜ.க பகிரங்கமாக வெளியிட வேண்டும்.மேலும் பா.ஜ.க அரசு தேர்தல் பத்திர விவரங்களை வெளியிடுவோர் மீது அதிகாரத்தை பயன்படுத்தி கட்டுப்படுத்துகிறது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com