

ராய்காட்,
ராய்காட் மாவட்டம் அலிபாக்கை சேர்ந்த ஒருவரிடம் குறைந்த விலைக்கு தங்கம் தருவதாக குஜராத், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பிரபுபாய் சோலங்கி (வயது37), மணிலால் ராதோடு (52), அர்ஜூன் சோலங்கி (52) மற்றும் லஷ்மிதேவி (45) ஆகிய 4 பேர் பேரம் பேசி உள்ளனர்.
இதற்காக அந்த நபர் ரூ.65 லட்சம் தருவதாக தெரிவித்தார். இதற்கு ஒப்புக்கொண்ட 4 பேரும் சம்பவத்தன்று தங்கத்தை கொடுத்து விட்டு பணத்தை பெற்று கொண்டு தலைமறைவாகி விட்டனர். பின்னர் தங்கத்தை சோதனை நடத்தியதில் அது பித்தளை என்பது தெரியவந்தது.
இதனால் ஏமாற்றப்பட்ட நபர் சம்பவம் குறித்து ராய்காட் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அசோக் துதேவிடம் புகார் அளித்தார். இதன்பேரில் அலிபாக் தாலுகா மண்டுவா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் தானே மாவட்டம் மற்றும் குஜராத், ராஜஸ்தான் மாநிலத்தில் பதுங்கி இருந்த 4 பேரை பிடித்து கைது செய்தனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில், இதே பாணியில் மும்பை, நாசிக், வார்தா, நாக்பூர், மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் போலி தங்கத்தை கொடுத்து மோசடி நடத்தி வந்தது தெரியவந்தது. இது தொடர்பாக அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.