பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி சசிதரூர் மீண்டும் பாராட்டு

ஈரான் அதிபருடன் பிரதமர் மோடியும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் அமைதிப் பேச்சு நடத்தியது வரவேற்கத்தக்கது என்று சசிதரூர் கூறியுள்ளார்.
பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி சசிதரூர் மீண்டும் பாராட்டு
Published on

புதுடெல்லி,

திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசி தரூர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரான இவர், ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிரான கருத்துகளை வெளிப்படுத்தினார். பிரதமர் மோடிக்கு ஆதரவாக செயல்படுவதாக அவரது செயல்பாடுகள் இருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் பலரும் தொடர்ந்து விமர்சித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்குப் பிறகு ஒருமித்த கருத்துடன் செயல்படுவதாக அவர் தெரிவித்திருந்தார். இதனால் காங்கிரஸ் தலைமைக்கும் சசி தரூருக்கும் இடையேயான மனக்கசப்பு முடிவுக்கு வந்ததாக பேசப்பட்டது.

ஆனால், சசி தரூர் நேற்று பிரதமர் மோடியை பாராட்டி பேசியது மீண்டும் கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.சசி தரூர் கூறியதாவது: மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் போர்ப் பதற்றத்தை தணிக்க அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும். அந்த வகையில் ஈரான் அதிபருடன் பிரதமர் மோடியும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் அமைதிப் பேச்சு நடத்தியது வரவேற்கத்தக்கது.

உலக நன்மைக்காக இந்தப் போர் முடிவுக்கு வர வேண்டும். இதுதொடர்பான அமைதிக்கான குரலை எழுப்புவதில் நாம் முன்னிலையில் இருக்க வேண்டும்.அமெரிக்காவும் இஸ்ரேலும் தான் முதலில் தாக்குதலை தொடங்கின. புத்தரும் காந்தியும் பிறந்த நமது இந்திய மண் அமைதி, அகிம்சை ஆகியவற்றை மிகப்பெரிய மரபாகக் கொண்டுள்ளது. அந்த மரபில்தான் நாம் நிற்க வேண்டும். இவ்வாறு சசி தரூர் எம்.பி. கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com