திடீரென முடங்கிய விண்டோஸ்

திடீரென முடங்கிய விண்டோஸ்.. விமான சேவைகள், பங்குச்சந்தைகள் கடும் பாதிப்பு

விண்டோஸ் அமைப்பில் ஏற்பட்ட பிரச்சினை, உலகெங்கிலும் உள்ள பல நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
Published on

புதுடெல்லி:

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளம் இன்று மதியம் திடீரென முடங்கியது. இதனால் உலகம் முழுவதும் விண்டோசை பயன்படுத்தும் பெரும்பாலான பயனர்களின் கம்ப்யூட்டர் திரையில் புளூ ஸ்கிரீன் ஆப் டெத் (Blue Screen of Death) என்ற எரர் தோன்றியது. அதில், 'உங்கள் கணினியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே ரீஸ்டார்ட் செய்ய வேண்டும். நடந்த தவறு தொடர்பான தரவுகளை சேகரித்து வருகிறோம். அதன்பின்னர், ரீஸ்டார்ட் செய்வோம்" என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால் விண்டோஸ் இயங்குதளத்தை பயன்படுத்துவோர் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். கம்ப்யூட்டரில் ஆட்டோ அப்டேட் வைத்திருந்தவர்கள்தான் முதலில் இந்த பாதிப்பை சந்தித்தனர். சிலருக்கு கம்ப்யூட்டர்கள் திரும்பத் திரும்ப ரீஸ்டார்ட் ஆகின. எனினும் புளூ ஸ்கிரீன் பாதிப்பு சரியாகவில்லை.

விண்டோஸ் செயலிழந்ததால் விமான துறை, மார்க்கெட்டுகள், வணிக நிறுவனங்கள், வங்கிகள், பங்குச்சந்தைகள் என பல்வேறு துறைகளில் பணிகள் முடங்கி உள்ளன. இந்தியாவில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. விண்டோஸ் செயல்படாததால் விமானங்களை இயக்க முடியாத நிலை உள்ளது. 

சென்னை உள்ளிட்ட பல்வேறு விமான நிலையங்களில் விமானங்களை இயக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான இந்திய விமான நிறுவனங்கள் இந்த பாதிப்பு குறித்து பயணிகளுக்கு தகவல் அனுப்பி உள்ளது. 

சைபர் செக்யூரிட்டி நிறுவனமான கிரவுட்ஸ்டிரைக் (Crowdstrike) அப்டேட்டில் ஏற்பட்ட குழப்பமே இந்த சிக்கலுக்கு காரணம் என தெரியவந்துள்ளது. மைக்ரோசாப்ட் சேவைகளில் பிரச்சினை ஏற்பட்டதை கிரவுட்ஸ்டிரைக் உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்த தொழில்நுட்ப பிரச்சினையை சரி செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com