

புதுடெல்லி,
மின்னணு முறையிலான வாக்குபதிவு இயந்திரத்தை கைவிட்டு விட்டு மீண்டும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக பல்வேறு பிராந்திய கட்சிகள் குரல் கொடுத்து வரும் நிலையில், அதற்கு வலு சேர்க்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் கூற்று அமைந்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டதாவது- தேர்தல் நடைமுறைகளில் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், தேர்தல் ஆணையம், முன்பு பயன்படுத்தப்பட்ட வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டு வரவேண்டும். மிகப்பெரிய ஜனநாயக நாடுகள் இந்த முறையையே கடைபிடிக்கின்றன என்றார்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் எனவே வாக்குச்சீட்டு முறையையே கடைபிடிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக கூறி வருவது குறிப்பிடத்தக்கது.