வக்கீல்களை தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை: கோவா சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்

கோவா வக்கீல்கள் பாதுகாப்பு மசோதா-2026 அம்மாநில சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
வக்கீல்களை தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை: கோவா சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்
Published on

பனாஜி,

வக்கீல்களை தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் சட்ட மசோதா கோவா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

கோவா சட்டசபையில் தாக்கல்

பணியில் இருக்கும் வக்கீல்கள் மீது தாக்குதல் நடைபெறுவதை தடுக்கும் வகையில், கோவா வக்கீல்கள் பாதுகாப்பு மசோதா-2026 அம்மாநில சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இதன் மூலம் பணியில் இருக்கும் வக்கீல்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதிக்க முடியும். அதே நேரத்தில், இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில், பொய்யான அல்லது உள்நோக்கத்துடன் கூடிய புகார்கள் அளிப்பவர்களுக்கு ஓராண்டு வரை சிறை தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

காரணம் என்ன?

இந்த சட்டம் கொண்டுவரப்படுவதற்கு காரணமாக, வக்கீல்கள் தங்கள் தொழில்முறை கடமைகளை செய்யும்போது வன்முறை, மிரட்டல், துன்புறுத்தல், பொய்யான வழக்குகளில் சிக்கவைத்தல் மற்றும் சொத்து சேதம் போன்ற சம்பவங்கள் அதிகரித்து வந்தது கூறப்படுகிறது.

இத்தகைய செயல்கள், சட்டத் தொழிலின் சுதந்திரம் மற்றும் அச்சமற்ற செயல்பாட்டைப் பாதிக்கக்கூடும் என்றும், இறுதியில் வழக்கு தொடருபவர்களின் சட்டப் பிரதிநிதித்துவம் மற்றும் நீதி பெறும் உரிமையைப் பாதிக்கக்கூடும் என்றும் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றம்

இச்சட்டத்தின் கீழ் செய்யப்படும் ஒவ்வொரு குற்றத்தையும் 'காக்னிசபிள்' (காவல்துறை வாரண்ட் இன்றி கைது செய்யக்கூடிய) குற்றமாக இச்சட்டம் வகைப்படுத்துகிறது. மேலும், நீதிமன்றங்களால் வசூலிக்கப்படும் அபராதத் தொகையில் இருந்து வக்கீல்களுக்கு இழப்பீடு வழங்கவும் இது வழிவகை செய்கிறது.

இந்த மசோதாவை, சட்டம் மற்றும் நீதித்துறையை கையாளும் முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் தாக்கல் செய்தார். வக்கீல்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் அவர்களின் சொத்துக்களுக்கு ஏற்படும் சேதம் அல்லது இழப்பைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த மசோதா, சட்டசபையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்ட மசோதா, அரசிதழில் வெளியிடப்படும் தேதியில் இருந்து நடைமுறைக்கு வர இருக்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com