ரூ.90 ஆயிரம் கோடி திரட்ட இலக்கு: எல்.ஐ.சி. பங்கு வெளியிடுவது எப்போது? - நிதித்துறை செயலாளர் விளக்கம்

பங்குச்சந்தையில் எல்.ஐ.சி.யை பட்டியலிட்டு, பங்கு விற்பனை எப்போது என்பது தொடர்பாக மத்திய நிதித்துறை செயலாளர் ராஜீவ் குமார் விளக்கம் அளித்துள்ளார்.
ரூ.90 ஆயிரம் கோடி திரட்ட இலக்கு: எல்.ஐ.சி. பங்கு வெளியிடுவது எப்போது? - நிதித்துறை செயலாளர் விளக்கம்
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது, வெளியிட்ட முக்கியமான அறிவிப்புகளில் ஒன்று, ஆயுள் காப்பீட்டுத்துறையில் முடிசூடா மன்னனாக திகழ்கிற எல்.ஐ.சி. என்னும் இந்திய ஆயுள் காப்பீட்டுக்கழகத்தை பங்குச்சந்தையில் பட்டியலிட மத்திய அரசு முடிவு செய்து உள்ளது என்பதாகும்.

இதையொட்டி அவர் கூறும்போது, பங்குச்சந்தையில் நிறுவனங்களை பட்டியலிடுகிறபோது, அந்த நிறுவனங்களை அது ஒழுங்குபடுத்துகிறது. நிதிச்சந்தையை நாடுவதற்கு வழிவகை செய்கிறது. அவற்றின் நிதி ஒழுங்குமுறை மேலும் அதிகரிக்கிறது. அவ்வாறு உருவாக்கப்பட்ட செல்வத்தில் சில்லறை முதலீட்டாளர்கள் பங்கேற்க வாய்ப்பு தருகிறது. பொதுப்பங்கு வெளியீட்டின் மூலம் தன்வசமுள்ள பங்குகளில் ஒரு பகுதியை விற்பனை செய்ய அரசு இப்போது முடிவு செய்துள்ளது என குறிப்பிட்டார்.

எல்.ஐ.சி.யின் 100 சதவீத பங்குகளும் தற்போது மத்திய அரசின்வசம்தான் உள்ளன. எல்.ஐ.சி.தான் ஆயுள் காப்பீட்டுத்துறையில் 70 சதவீத சந்தை பங்களிப்பையும் கொண்டுள்ளது. இந்த துறையில் உள்ள ஒரே பொதுத்துறை நிறுவனமும் எல்.ஐ.சி. மட்டும்தான்.

என்ன, பொதுப்பங்கு வெளியீட்டின் வாயிலாக இந்த பங்குகளில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மத்திய அரசு விற்பனை செய்கிறபோது, அந்த நிறுவனத்தின் மீதான அரசின் பிடி சற்றே தளரும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில், சில்லரை முதலீட்டாளர்கள் கூட, எல்.ஐ..சி.யில் நீண்ட கால நோக்கில் முதலீடு செய்கிறபோது, அந்த நிறுவனத்தின் வளர்ச்சியில் பங்கு பெறுகிற வாய்ப்பு கிடைக்கும். அவர்களும் நல்ல லாபம் அடைய வழி உண்டு.

இந்த நிலையில், எல்.ஐ.சி.யை பங்குச்சந்தையில் பட்டியலிடுவது தொடர்பாக நிதித்துறை செயலாளர் ராஜீவ் குமார் நேற்று கூடுதல் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எல்.ஐ.சி.யை பங்குச்சந்தையில் பட்டியலிடுவதற்கு பல்வேறு செயல்முறைகளை பின்பற்ற வேண்டியது இருக்கிறது. சட்ட அமைச்சகத்துடன் கலந்து பேசி சட்ட திருத்தங்களும் செய்ய வேண்டியது உள்ளது. இந்தப் பணிகளை தொடங்கி விட்டோம். எல்.ஐ.சி.யை பங்குச்சந்தையில் பட்டியலிடும் நடவடிக்கையானது அடுத்த நிதி ஆண்டின் (2020-21) இரண்டாவது அரையாண்டு காலத்தில் (அதாவது, 2020-ம் ஆண்டு அக்டோபர் தொடங்கி 2021 மார்ச் மாதம்) நடைபெறும் என தோன்றுகிறது.

எல்.ஐ.சி.யை பங்குச்சந்தையில் பட்டியலிடும் நடவடிக்கை, கூடுதல் வெளிப்படைத்தன்மையை கொண்டு வரும். பொதுமக்கள் பங்கேற்புக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தரும். பங்குச்சந்தையை மேலும் ஆழமானதாக ஆக்கும்.

எத்தனை சதவீதம் பங்குகள் விற்பனை செய்யப்படும் என கேட்கிறீர்கள். இது குறித்த முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. இருப்பினும் 10 சதவீத பங்குகள் விற்பனை செய்யப்படலாம் என்று அவர் கூறினார்.

அடுத்த நிதி ஆண்டின் இரண் டாவது அரையாண்டு காலத்தில் எல்.ஐ.சி.யை பங்குச்சந்தையில் பட்டியலிட்டு விட்டால் உடனடியாக பொதுப்பங்குகளை வெளியிட வழி பிறக்கும்.

எல்.ஐ.சி.யை பங்குச்சந்தையில் பட்டியலிடுவதின்மூலம் பொதுப்பங்குகளை வெளியிட்டு அரசு ரூ.90 ஆயிரம் கோடியை திரட்ட இலக்கு வைத்துள்ளது.

அரசுத்துறை பங்குகளை விற்பனை செய்வதின்மூலம் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் கோடி நிதி திரட்ட அரசு இலக்கு வைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

எல்.ஐ.சி.யின் துணை நிறுவனமான ஐ.டி.பி.ஐ. என்னும் இந்திய தொழில் வளர்ச்சி வங்கியின் பங்குகளையும் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com