காஷ்மீர் பண்டிட்டுகளின் சொத்துகள் திரும்ப ஒப்படைக்கப்படும் - மத்திய அரசு உறுதி

காஷ்மீர் பண்டிட்டுகளிடம் இருந்து வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்ட சொத்துகள் திரும்ப ஒப்படைக்கப்படும் என்று மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்தது.
Image Courtesy: ANI
Image Courtesy: ANI
Published on

புதுடெல்லி,

காஷ்மீரை பூர்வீகமாக கொண்ட காஷ்மீர் பண்டிட்டுகள், கடந்த 1990-ம் ஆண்டு பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக, அங்கிருந்து வெளியேறி வேறு மாநிலங்களில் தஞ்சம் புகுந்தனர்.

இந்தநிலையில், நேற்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது, காஷ்மீர் பண்டிட்டுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் கூறியதாவது:-

அராஜகம் காரணமாக வெளியேறிய காஷ்மீர் பண்டிட்டுகள் உள்ளிட்ட காஷ்மீரிகள் அனைவரிடம் இருந்தும் வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்ட சொத்துகள், அவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்படும். அதற்கான திறன், பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு உள்ளது.

அந்த சொத்துகளின் பாதுகாவலராக மாவட்ட கலெக்டர் நியமிக்கப்பட்டுள்ளார். புலம்பெயர்ந்த காஷ்மீரிகளின் புகார்கள் உண்மையாக இருந்தால், சொத்துகள் அவர்களிடம் ஒப்படைக்கப்படும்.

இதுவரை 610 பேருக்கு சொத்து ஒப்படைக்கப்பட்டுள்ளது. அப்பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த புகார்களை ஆராய காஷ்மீர் அரசு ஒரு வலைத்தளத்தை தொடங்கி உள்ளது.

புலம்பெயர்ந்த காஷ்மீரிகளில் 2020-2021 நிதிஆண்டில் 841 பேருக்கும், 2021-2022 நிதிஆண்டில் 1,264 பேருக்கும் மாநில அரசு வேலைவாய்ப்பு அளித்துள்ளது. காஷ்மீரில் மீண்டும் குடியேற விரும்பும் புலம்பெயர்ந்தவர்களுக்கு வேலை அளிக்க அரசு தயாராக உள்ளது.

காஷ்மீர், வளர்ச்சி பாதையில் உள்ளது. தொழில் வளர்ச்சிக்காக ரூ.51 ஆயிரம் கோடி மதிப்புள்ள முதலீட்டு திட்டங்களை பெற்றுள்ளது. அதன்மூலம் 4 லட்சத்து 50 ஆயிரம்பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள். 13 சாலைகள் அமைத்ததன் மூலம் காஷ்மீர் முழுவதும் போக்குவரத்து தொடர்பு கிடைத்துள்ளது.

ஆயிரம் மக்கள்தொகை கொண்ட கிராமங்கள், சாலை மூலம் இணைக்கப்பட்டுள்ளன. 2023-ம் ஆண்டுக்குள், 500 மக்கள் தொகை கொண்ட கிராமத்துக்கும் சாலை போடப்படும்.

மின்சாரம் அதிகமாக உற்பத்தி ஆவதால், 24 மணி நேர மின்வினியோகம் செய்யப்படுகிறது. ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். ஆகிய கல்வி நிறுவனங்கள் கூட அமைக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com