

புதுச்சேரி,
புதுச்சேரி சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 9-ந்தேதி நடக்கிறது. தேர்தல் அறிவிப்பு வெளியான உடனேயே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலானது. வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், புதுச்சேரி சாரம் அவ்வை திடலில் பறக்கும் படை அதிகாரி அர்ஜூன் ராமகிருஷ்ணன் தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த மினிலாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் ரூ.5 கோடி மதிப்பிலான தங்க நகைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அதிகாரிகள் மினி லாரியில் வந்த 3 பேரிடம் உரிய ஆவணங்களுடன் நகைகள் கொண்டு செல்லப்படுகிறதா? என விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் புதுச்சேரியில் உள்ள நகைக்கடையில் இருந்து சென்னை பல்லாவரத்தில் உள்ள கடைக்கு நகைகளை கொண்டு செல்வதாக தெரிவித்தனர்.
மேலும் சில ஆவணங்களையும் அவர்கள் காண்பித்தனர். இதையடுத்து அதிகாரிகள், நகைகள் அனைத்தும் உரிய ஆவணத்துடன் தான் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை அறிய மினி லாரியுடன் நகைகளை பறிமுதல் செய்து ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.
இதுகுறித்து வருமான வரித் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்துக்கு விரைந்து வந்து வேனில் கொண்டு வரப்பட்ட தங்க நகைகளுக்கு அளிக்கபட்ட ஆவணம் உண்மையானதா என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.