ஆமதாபாத் விமான விபத்து இடத்தில் விரவி கிடந்த தங்கம், பணம்; மீட்பில் ஈடுபட்ட தொழிலதிபரின் பேட்டி

இங்கிலாந்து, இந்தியா நாடுகளின் பாஸ்போர்ட்டுகள், எரிந்த நிலையில் மொபைல் போன்கள், லேப்டாப்புகள் ஆகியவை விரவி கிடந்துள்ளன.
ஆமதாபாத் விமான விபத்து இடத்தில் விரவி கிடந்த தங்கம், பணம்; மீட்பில் ஈடுபட்ட தொழிலதிபரின் பேட்டி
Published on

ஆமதாபாத்,

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து இங்கிலாந்தின் லண்டன் நகருக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு புறப்பட்டு சென்றது. அது பறக்க தொடங்கிய சிறிது நேரத்திலேயே கீழே விழுந்து தீப்பற்றி எரிந்து உருக்குலைந்தது. இந்த விபத்தில், விமானத்தில் பயணித்தவர்கள் உள்பட 240-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் குஜராத் முன்னாள் முதல்-மந்திரி விஜய் ரூபானியும் (வயது 68) பலியானார்.

உயிரிழந்தவர்களின் உடல்களை டி.என்.ஏ. பரிசோதனை மூலம் அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 100-க்கும் மேற்பட்ட பயணிகளின் டி.என்.ஏ. மாதிரிகள் உறுதி செய்யப்பட்டு, உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், விமான விபத்து நடந்தபோது, 300 மீட்டர் தொலைவில் உள்ள வீட்டில் வசித்து வரும் ராஜேஷ் பட்டேல் என்ற தொழிலதிபர் மீட்பு முயற்சிகளுக்கு உதவிய விவரங்களை நினைவுகூர்ந்துள்ளார். அவர் கூறும்போது, எனக்கு அடுத்த வீட்டில் வசித்து வரும் டாக்டர் ஒருவரின் ஆம்புலன்ஸ் உதவியுடன் சம்பவ பகுதிக்கு சென்றோம்.

ஆனால், எரிபொருள் எரிந்து கொண்டும், தீப்பிடித்து மளமளவென பரவி கொண்டும் இருந்தது. இதனால், எங்களால் எதனையும் காண முடியவில்லை. புகையால் உள்ளே செல்ல முடியவில்லை.

தீயணைந்ததும், விபத்து பகுதியை நெருங்கினோம். எல்லா இடங்களிலும் உடல்களாக கிடந்தன. உயிருடன் எவரேனும் இருக்கிறார்களா? என கண்டறிய முயற்சித்தோம். ஆனால், சம்பவ பகுதியை பார்த்ததும், யாரும் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என தெளிவாக தெரிந்தது. பழைய சேலைகள், துப்பாட்டாக்கள் உதவியுடன் உடல்களை சேகரிக்க உதவினோம்.

எங்களால் யாரையும் காப்பாற்ற முடியவில்லையே என நினைத்து வருந்தினோம். அதனால், அவர்களின் உடைமைகளையாவது காப்பாற்றி குடும்பத்தினரிடம் தருவோம் என நினைத்தோம்.

இங்கிலாந்து, இந்தியா நாடுகளின் பாஸ்போர்ட்டுகள் மற்றும் எரிந்த நிலையில் மொபைல் போன்கள், லேப்டாப்புகள் மற்றும் ஐபேட்கள் ஆகியவை விரவி கிடந்தன.

நிறைய நகைகள் கிடந்தன. 70 முதல் 80 தோலாக்கள் (1 தோலா என்பது 11 கிராம்) வரையிலான தங்கம் இருந்தது. ரூ.70 ஆயிரம் பணமும் எரியாத நிலையில் கிடைத்தது. அவற்றை அரசு அதிகாரியிடம் நாங்கள் கொடுத்தோம். அந்த பகுதியை ஒரு புகைப்படம் கூட நான் எடுக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com