தங்க கடத்தல் வழக்கில் சிக்கிய நடிகையின் வளர்ப்பு தந்தை டி.ஜி.பி. ராமசந்திர ராவுக்கு கட்டாய விடுப்பு


தங்க கடத்தல் வழக்கில் சிக்கிய நடிகையின் வளர்ப்பு தந்தை டி.ஜி.பி. ராமசந்திர ராவுக்கு கட்டாய விடுப்பு
x

தங்க கடத்தல் வழக்கில் சிக்கிய நடிகையின் வளர்ப்பு தந்தை டி.ஜி.பி. ராமசந்திர ராவுக்கு கட்டாய விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.

பெங்களூரு,

துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்தபோது கடந்த 3-ந்தேதி நடிகை ரன்யா ராவை பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.12½ கோடி மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் பிறகு அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.2.06 கோடி மதிப்புள்ள தங்கம், ரூ.2.67 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

ரன்யா ராவ் தற்போது பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். விசாரணையின்போது ரன்யா ராவ் கொடுத்த தகவலின் அடிப்படையில், தொழில் அதிபர் தருண் கொண்டரு ராஜு என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜாமீன் கோரி நடிகை ரன்யா ராவ் தாக்கல் செய்த மனுவை பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தை ராமசந்திர ராவ், கர்நாடக போலீசில் டி.ஜி.பி. அந்தஸ்து நிலையில் அதிகாரியாக உள்ளார். அதனால் நடிகை ரன்யா ராவ் வெளிநாட்டுக்கு சென்று வரும்போது விமான நிலையத்தில் இருந்து வீடு வரை பாதுகாப்புக்கு போலீஸ் கார், காவலர்களை பயன்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது.

டி.ஜி.பி.யின் மகள் என்பதால் அவரை போலீசார் எங்கும் சோதனை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. தனது தந்தையின் பெயரை அவர் தவறாக பயன்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. அவருக்கு டி.ஜி.பி. ராமசந்திர ராவ் உதவி செய்தாரா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், ரன்யா ராவின் வளர்ப்பு தந்தை டி.ஜி.பி. ராமசந்திர ராவுக்கு கட்டாய விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவு இன்று மாலை பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் அதில் கட்டாய விடுப்பு வழங்கப்பட்டதற்கான காரணம் குறிப்பிடப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

1 More update

Next Story