தங்கம் கடத்தல் விவகாரம்: மந்திரி ஜலீல் பதவி விலக கோரி கேரளாவில் எதிர்க்கட்சிகள் போராட்டம்; போலீசார் தடியடி

தங்கம் கடத்தல் விவகாரத்தில் மந்திரி ஜலீல் பதவி விலகக்கோரி கேரளாவில் நேற்று பல இடங்களில் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவனந்தபுரத்தில் நடந்த போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தங்கம் கடத்தல் விவகாரம்: மந்திரி ஜலீல் பதவி விலக கோரி கேரளாவில் எதிர்க்கட்சிகள் போராட்டம்; போலீசார் தடியடி
Published on

திருவனந்தபுரம்,

கேரளாவில் தங்கம் கடத்தல் விவகாரம் பூகம்பத்தை கிளப்பி உள்ளது. அது ஆளுங்கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இந்த விவகாரத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயனுடன் நெருக்கமாக இருந்த முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கர் பெயரும் அடிபட்டுள்ளது. இதனால் தற்போது அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் கேரள உயர்கல்வி மந்திரி கே.டி.ஜலீலிடம், தங்கம் கடத்தல் விவகாரம் தொடர்பாக நேற்றுமுன்தினம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதாவது, அரசின் நெறிமுறை விதிகளை மீறி துபாயில் இருந்து தூதரக பார்சல்கள் மூலமாக மத சார்புள்ள நூல்களை அனுப்பியது தொடர்பாக அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து அமலாக்க பிரிவு அதிகாரிகளின் விசாரணைக்கு ஆஜரான மந்திரி ஜலீல் பதவி விலக கோரி நேற்று கேரளா முழுவதும் எதிர்க்கட்சிகள் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் கேரள அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது என்றே கூறலாம். அந்த அளவுக்கு காங்கிரஸ், பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் தனித்தனியாக போராட்ட களத்தில் குதித்தனர்.

தங்கம் கடத்தல் விவகாரத்தில் மந்திரி ஜலீலை, முதல்-மந்திரி பினராயி விஜயன் காப்பாற்ற முயல்வதாக காங்கிரசும், பா.ஜ.க.வும் வரிந்து கட்டி குற்றம்சாட்டுகிறது.

திருவனந்தபுரத்தில் பேரணியாக வந்த இளைஞர் காங்கிரசார், பா.ஜ.க. யுவ மோர்ச்சா அமைப்பினர், இளைஞர் லீக் அமைப்பினர் பல இடங்களில் தனித்தனியாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தொடர்ந்து கோஷங்களை எழுப்பியபடி இருந்தனர். இதனை தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர். அவ்வாறு கலையாமல் இருந்தவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் அப்புறப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசாரின் தாக்குதலில் பலர் காயம் அடைந்தனர். இதனால் அவர்கள் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதேபோல் கொல்லத்தில் மந்திரி மெர்சி குட்டிமம்மா வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட காங்கிரஸ் தலைவர் பிந்து கிருஷ்ணா மற்றும் தொண்டர்கள் மீது போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டினர். கோழிக்கோடு, திருச்சூர் மற்றும் பத்தனம் திட்டையிலும் இளைஞர் காங்கிரசார் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது போலீசாருக்கும், தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

பல இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com