பீகாரில் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான தங்கம் கொள்ளை

பீகாரில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் புகுந்த 6 பேர் கொண்ட கும்பல் ரூ.10 கோடி மதிப்பிலான தங்கத்தினை கொள்ளையடித்து சென்றனர்.
பீகாரில் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான தங்கம் கொள்ளை
Published on

முசாபர்பூர்,

பீகாரின் முசாபர்பூர் நகரில் பகவான்பூர் பகுதியில் முத்தூட் பைனான்ஸ் என்ற தனியார் நிதி நிறுவனம் அமைந்து உள்ளது. இந்த நிலையில், வாடிக்கையாளர்கள் போல் 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று அங்கு சென்றுள்ளது. பின்னர் நிதி நிறுவன காவலாளியிடம் தங்கத்திற்கு கடன் வாங்க வந்தோம் என கூறியுள்ளனர்.

இதனை நம்பிய காவலாளி அவர்களை உள்ளே செல்ல அனுமதித்து உள்ளார். ஆனால் அவர்களில் ஒருவன் தன்னிடம் இருந்த கைத்துப்பாக்கியின் பின்புறத்தினை வைத்து காவலாளியை தாக்கியுள்ளான். இதில் அவர் மயங்கி விழுந்துள்ளார்.

இதன்பின் உள்ளே சென்று மேலாளரை துப்பாக்கி முனையில் மிரட்டி சாவிகளை வாங்கி கொண்டனர். மொத்தம் 6 பேர் கொண்ட இந்த கும்பலில் ஒருவன் தங்கங்களை அள்ளி 5 மூட்டைகளில் நிரப்பி உள்ளான். மற்ற 5 பேரும் அங்கிருந்தவர்களை மிரட்டியபடி இருந்துள்ளனர்.

அவர்கள் யாரையும் எதுவும் செய்யாமல் கொள்ளையடித்த தங்கங்களுடன் தப்பி சென்று விட்டனர். இவற்றின் மதிப்பு ரூ.10 கோடி இருக்கும் என நிதி நிறுவன அதிகாரிகள் போலீசாரிடம் தெரிவித்து உள்ளனர். கொள்ளை கும்பலை தேடும் பணியில் தீவிரமுடன் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com