சிங்கப்பூரில் இருந்து பெங்களூருவுக்கு கடத்தப்பட்ட ரூ.2 கோடி தங்கம் பறிமுதல்: 2 பேர் கைது

தங்கத்தை பெல்ட் ஊக்குகள் மற்றும் சங்கிலிகளாக நுணுக்கமாக வடிவமைத்து கடத்தி வந்தது தெரிந்தது.
தேவனஹள்ளி விமான நிலையம்
Published on

தேவனஹள்ளி,

சிங்கப்பூரில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.2 கோடி மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அதனை கடத்தி வந்த 2 பயணிகளையும் போலீசார் கைது செய்தனர்.

சுங்கத்துறை அதிகாரிகள்

பெங்களூரு புறநகர் தேவனஹள்ளியில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சிங்கப்பூரில் இருந்து மர்ம நபர்கள் சிலர் விமானம் மூலம் தங்கம் கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப்படை அதிகாரிகள் சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் வரும் பயணிகளின் உடமைகளில் தீவிரமாக சோதனை நடத்தினர்.

அந்த சோதனையின் போது, 2 பயணிகளின் சந்தேகத்திற்கிடமான நடத்தையை கண்டு சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும், அவர்களிடம் இருந்த உடைகளையும், பொருட்களையும் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது, சாதாரண உலோக பொருட்கள் போன்று தோற்றமளிக்கும் வகையில், தங்கத்தை பெல்ட் ஊக்குகள் மற்றும் சங்கிலிகளாக நுணுக்கமாக வடிவமைத்து கடத்தி வந்தது தெரிந்தது.

பறிமுதல்

இதனையடுத்து, அவர்களிடம் இருந்து 1 கிலோ 370 கிராம் எடையுள்ள தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் சந்தை மதிப்பு சுமார் ரூ.2 கோடி இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சட்டவிரோதமாக தங்கத்தை கடத்தி வந்த குற்றத்திற்காக சுங்க சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், பயணிகள் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இந்த தங்க கடத்தலின் பின்னணியில் உள்ள முக்கிய குற்றவாளிகள் யார்? இந்த தங்கம் யாருக்கு கொடுப்பதற்காக கொண்டு வரப்பட்டது? இதில் சர்வதேச கடத்தல் கும்பலுக்கு தொடர்பு உள்ளதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com