ஐடி ஊழியர்களுக்கு குட் நியூஸ்: ஏஐயால் எந்த பாதிப்பும் வராது- நாஸ்காம் தகவல்

ஏஐ பயன்பாட்டால் இந்தியாவின் ஐ.டி. சேவைத் துறைக்கு பாதிப்பு ஏற்படும் என்ற கருத்து தவறான புரிதலே என்று நாஸ்காம் கூறியுள்ளது.
Image credits: Grok AI
Image credits: Grok AI
Published on

ஏஐ ஆதிக்கம் பெருகி வருவதால் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் ஆட்குறைப்பு நடவடிக்கையை கையில் எடுத்துள்ள சூழலில், இந்திய ஐடி துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக தொழில்​நுட்ப துறை அமைப்​பான நாஸ்​காம் அறிவிப்பு அமைந்துள்ளது. அதாவது, ஐடி துறைகள் பாதிக்கப்படாது என்று நாஸ்காம் கூறியுள்ளது. இது குறித்து நாஸ்காம் கூறியதாவது:

ஏஐ வரவால் இந்திய தொழில்நுட்ப சேவைத் துறை பாதிக்கப்படும் என்ற அச்சம் அடிப்படையற்றது. மாறாக, இந்தத் துறையின் செயல்பாடுகள் மற்றும் பங்களிப்புகளை ஏஐ மேலும் ஒழுங்குபடுத்தி, திறன் மிக்கதாக மாற்றும். ஆந்த்ரோபிக்கின் ‘கிளாட் கோவர்க்’ போன்ற புதிய ஏஐ கருவிகள் பல்வேறு பணிகளை தானியங்கி முறையில் மேற்கொள்ள உதவும். இருப்பினும், அவை இந்திய ஐ.டி. சேவைகளை புறக்கணிக்கவோ மாற்றிவிடவோ போவதில்லை. அதற்கு பதிலாக, இந்திய ஐ.டி. நிறுவனங்களின் திறன்களை ஏஐ கருவிகள் மேலும் வலுப்படுத்தும்.

ஏஐ பயன்பாட்டால் இந்தியாவின் ஐ.டி. சேவைத் துறைக்கு பாதிப்பு ஏற்படும் என்ற கருத்து தவறான புரிதலே. சிக்கலான தொழில்நுட்ப சூழல்களில் இயங்கும் உலகளாவிய நிறுவனங்களுடன் இணைந்து இந்திய ஐ.டி. சேவை நிறுவனங்கள் ஏற்கெனவே செயல்பட்டு வருகின்றன. காலத்திற்கேற்ப முன்னேற வேண்டிய தேவையை உணர்ந்து, இந்திய ஐ.டி. நிறுவனங்கள் தங்களை மறுசீரமைக்கும் பணியை முன்பே தொடங்கியுள்ளன. எனவே, ஏஐ வருகை ஐ.டி. துறையை சீர்குலைக்கும் என்ற கவலை தேவையற்றதாகும்” என்று தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com