குஜராத் விமான விபத்து: பிரிட்டிஷ் தம்பதியின் கடைசி வார்த்தை

ஆமதாபாத் விமான விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
ஆமதாபாத்,
குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து கடந்த 12-ந் தேதி லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், சிறிது நேரத்திலேயே அருகில் உள்ள பி.ஜே. மருத்துவக்கல்லூரி விடுதி கட்டிடத்தில் விழுந்து வெடித்து சிதறியது. இதில் விமானத்தில் இருந்தவர்கள் மற்றும் அது விழுந்த மருத்துவக்கல்லூரி விடுதியில் இருந்தவர்கள் என சுமார் 270 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இந்திய வரலாற்றில் கடந்த 30 ஆண்டுகளில் நடந்த மிக மோசமான பதிவான இந்த விபத்து பலரையும் மனதளவில் பாதித்து இருக்கிறது. பலியானோரின் உடல்களை டி.என்.ஏ. சோதனை மூலம் அடையாளம் காணும் பணி கடந்த 4 நாட்களாக நடந்து வருகிறது. நாட்டையே உலுக்கிய இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில், ஆமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள் தொடர்ந்து வெளியாகி கல் நெஞ்சையும் கரைத்து வருகின்றன. அந்தவகையில் பிரிட்டிஷ் தம்பதி பியோங்கல் கிரீன்லா-ஜேமி மீக் இருவரும் விமானத்தில் இருந்தவாறே சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள வீடியோ பதிவு பார்ப்போரின் கண்களை குளமாக்கி வருகின்றன. கணவர் மீக்குடன் இணைந்து கிரீன்லா மகிழ்ச்சியாக பதிவு செய்துள்ள அந்த வீடியோவில், 'நாங்கள் விமான நிலையத்தில் இருக்கிறோம். தற்போதுதான் விமானத்தில் ஏறினோம். விடைபெறுகிறோம் இந்தியா' என கூறியிருந்தார்.
அதே பதிவில், தம்பதியின் மகிழ்ச்சியான மற்றொரு உரையாடல் ஒன்றும் இடம்பெற்று உள்ளது. அதில் பியோங்கல் சிரித்துக்கொண்டே, 'உங்கள் துணையுடன் பொறுமையை இழக்காதீர்கள். மகிழ்ச்சியாக, மகிழ்ச்சியாக, மகிழ்ச்சியுடன் அமைதியாகத் திரும்பிச் செல்லுங்கள்' என்று கூறுகிறார். இந்த பதிவுகள் வைரலாக பரவி சமூக வலைத்தளவாசிகளிடம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.






