கர்நாடக சட்டசபையில் சரக்கு-சேவை வரி சட்டத்திருத்த மசோதா தாக்கல்

கர்நாடக சட்டசபையில் ஜி.எஸ்.டி. வரி விரயத்தை தடுக்க சரக்கு-சேவை வரி சட்டத்திருத்த மசோதா ஒருமனதாக நிறைவேறியது.
கர்நாடக சட்டசபையில் சரக்கு-சேவை வரி சட்டத்திருத்த மசோதா தாக்கல்
Published on

பெங்களூரு:-

வரி செலுத்துவோர்

கர்நாடக சட்டசபையில் நேற்று சட்டத்துறை மந்திரி எச்.கே.பட்டீல், கர்நாடக சரக்கு-சேவை வரி(ஜி.எஸ்.டி.) சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

கர்நாடகத்தில் மதிப்பு கூட்டு வரி அமலில் இருந்தபோது, வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 80 ஆயிரமாக இருந்தது. ஜி.எஸ்.டி. வரி முறை அமலுக்கு வந்த பிறகு அதன் எண்ணிக்கை 10 லட்சமாக அதிகரித்துள்ளது. அதாவது புதிதாக 4.20 லட்சம் பேர் வரி வளையத்திற்குள் வந்துள்ளனர். கடந்த 2017-18-ம் ஆண்டு ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.44 ஆயிரத்து 816 கோடியாக இருந்தது.

அதிகமான நடவடிக்கைகள்

அது 2022-23-ம் ஆண்டில் ரூ.81 ஆயிரத்து 848 கோடியாக அதிகரித்துள்ளது. இதனால் அரசுக்கு வருவாய் அதிகரித்ததுடன் நமது பட்ஜெட் அளவும் உயர்ந்துள்ளது. சேவைத்துறையில் தான் வரி ஏய்ப்பு நடப்பதாக ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் நமது மொத்த வரி வருவாயில் 56 சதவீதம் சேவைத்துறையில் இருந்து தான் வருகிறது.

கடந்த 2022-23-ம் ஆண்டு ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பை தடுக்க 11 ஆயிரத்து 733 சோதனைகள் நடத்தப்பட்டன. இதன் மூலம் வரி அபராதமாக ரூ.1,320 கோடி வசூலிக்கப்பட்டது. இது சிறிய தொகை கிடையாது. வரி ஏய்ப்பை தடுக்க இன்னும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வரி வசூலில் அதிகாரிகள் நேர்மையான முறையில் செயல்பட வேண்டும். போலி ஏஜென்டுகளை தடுக்க அரசு இன்னும் அதிகமான நடவடிக்கைகளை எடுக்கும்.

சிக்கல்களை தீர்க்கும்

ஜி.எஸ்.டி. வரி விரயத்தை தடுக்கும் நோக்கத்தில் மின்னணு வணிகங்களை சோதனை செய்யும் பணிகள் அதிகரிக்கப்படும். மாநிலங்களுக்கு இடையே சரக்கு வினியோகம் மீதான வரியை வசூலிப்பதில் உள்ள சிக்கல்களை தீர்க்கும் நோக்கத்தில் இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தில் மொத்தம் 22 திருத்தங்கள் செய்யப்படுகின்றன. இதில் 6 திருத்தங்கள் ஏஜென்டுகளுக்கு சாதகமானது. மீதமுள்ள 16 திருத்தங்கள் வா நடைமுறைகளை எளிமையாக்கும்.

இவ்வாறு எச்.கே.பட்டீல் பேசினார்.

அதைத்தொடர்ந்து இந்த ஜி.எஸ்.டி. சட்டத்திருத்த மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மேலும் கர்நாடக சட்டசபை (தகுதி நீக்கத்தை தடுப்பது) சட்டத்திருத்த மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. எம்.எல்.ஏ.க்களாக உள்ள பொன்னண்ணா முதல்-மந்திரியின் சட்ட ஆலோசகராகவும், ஜெயச்சந்திரா மாநில அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தகுதி நீக்கம் ஆவதை தடுக்கும் நோக்கத்தில் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com