கூகுள் மேப்பால் விபரீதம்: ஆற்றுக்குள் பாய்ந்த வேன் - 4 பேர் பலி

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, ஜெய்ப்பூரை சேர்ந்த குடும்பத்தினர் 9 பேர் நேற்று ஆன்மிக சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் சொந்த ஊருக்கு நேற்று இரவு வேனில் திரும்பிக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில், வேனை டிரைவர் கூகுள் மேப்ப்பை பார்த்து காரை ஓட்டியுள்ளார். குடும்பத்தினர் அனைவரும் உறங்கிய நிலையில், வேன் சொமி-உப்ரிடா பாலத்தில் சென்றுள்ளது. அந்த பாலம் பராமரிப்பு பணி காரணமாக கடந்த சில மாதங்களாக மூடி இருந்துள்ளது.
ஆனால், கூகுள் மேப்பில் பாலம் பயன்பாட்டில் இருப்பதுபோல் காட்டப்பட்டிருந்ததால் டிரைவர் வேனை இயக்கியுள்ளார். அப்போது, வேன் பாலத்தில் இருந்து திடீரென பனாஸ் ஆற்றுக்குள் பாய்ந்தது. இந்த சம்பவத்தில் வேனில் பயணித்த குழந்தை உள்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 5 பேர் உயிர் பிழைத்தனர். உயிர் பிழைத்தவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற போலீசார், ஆற்றில் அடித்து செல்லப்பட்டவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






