அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்: கோடிக்கணக்கான மக்களை ஒன்று சேர்த்தது - பிரதமர் மோடி பெருமிதம்

ராமரின் ஆட்சி அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களுக்கு உத்வேகம் அளித்தது.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்: கோடிக்கணக்கான மக்களை ஒன்று சேர்த்தது - பிரதமர் மோடி பெருமிதம்
Published on

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றது முதல் மனதின் குரல் (மன் கி பாத்) என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

அதன்படி, 2024-ம் ஆண்டின் முதல் மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

அயோத்தியில் ராமர் கோவிலில் நடந்த கும்பாபிஷேகம் கோடிக்கணக்கான மக்களை ஒன்றிணைத்தது.  எல்லோருடைய உணர்வும் ஒன்றுதான். அனைவரின் பக்தியும் ஒன்றுதான், எல்லோருடைய வார்த்தைகளிலும் ராமர் இருக்கிறார். அனைவரின் இதயத்திலும் ராமர் இருக்கிறார். ராமர் கோவில் கும்பாபிஷேகத்தின்போது பலர் ராமர் பஜனைகளை பாடி ராமருக்கு அர்ப்பணித்தனர். கடந்த 22 அன்று மாலை நாடு முழுவதும் 'ராம் ஜோதி' ஏற்றி தீபாவளி போன்று கொண்டாடப்பட்டது.

பத்ம விருதுகளால் கவுரவிக்கப்படும் பலர், பெரிய மாற்றங்களைச் செய்ய அடிமட்டத்தில் இருந்து பணியாற்றியவர்கள்.

கடந்த பத்தாண்டுகளில் பத்ம விருதுகள் வழங்கும் முறை முற்றிலும் மாறியிருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இப்போது மக்களின் பத்மாவாக மாறிவிட்டது.

இந்தாண்டு குடியரசு தின அணிவகுப்பு சிறப்பாக இருந்தது. இந்த அணிவகுப்பில் இருந்த பெண்கள் சக்தி குறித்து அனைவரும் பேசினர்.

இன்றைய இந்தியாவில் நமது மகள்கள், பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சிறப்பாக பணியாற்றுகின்றனர். சுய உதவிக் குழுக்களில் பெண்கள் முத்திரை பதித்துள்ளனர். நாடு முழுவதும் இக்குழுக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்களின் பணியும் விரிவடைகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com