போர் பதற்றம் : நாளை மறுநாள் போர்க்கால ஒத்திகை நடத்த மத்திய அரசு உத்தரவு என தகவல்

போர்க்காலங்களில் எப்படி செயல்பட வேண்டும் என ஒத்திகை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
பஹல்காம் தாக்குதலையைடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நாடு முழுவதும் போர் ஒத்திகை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அனைத்து மாநில அரசுகளுக்கும் மாநில உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. தாக்குதல் நடந்தால் தீ அணைப்புத்துறை, பேரிடர் மீட்பு துறை உள்ளிட்டவற்றை எப்படி செயல்பட வேண்டும் என்பது ஒத்திகையில் இடம் பெறும். உணவு , மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை சேமித்து வைப்பது தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்படவும் வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.
சிவில், பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து பொதுமக்கள், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்படும் என்று உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன. வான்வழி தாக்குதல் எச்சரிக்கை சைரன்களை செயல்படுத்துதல் தொடர்பாகவும் ஒத்திகை நடத்த மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சக அறிவுறுத்தல் படி பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று சொல்லப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:
1.விமானத் தாக்குதல் எச்சரிக்கை சைரன்களை இயக்குதல்
2. பொதுமக்கள், மாணவர்கள் போன்றோருக்கு, விரோதத் தாக்குதல் ஏற்பட்டால் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சிவில் பாதுகாப்பு அம்சங்களில் பயிற்சி அளித்தல்.
3. கிராஷ் பிளாக் அவுட் நடவடிக்கைகளை வழங்குதல்
4. முக்கிய தாவரங்கள் / நிறுவல்களை முன்கூட்டியே மறைப்பதற்கு ஏற்பாடு
5. வெளியேற்றும் திட்டத்தையும் அதன் ஒத்திகையையும் புதுப்பித்தல்
போர் பதற்றம் ஏன்?
பஹல்காமில் பயங்கரவாதிகள் அரங்கேற்றிய கொலை வெறி தாக்குதல் இந்தியர் மனங்களில் நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கிறது. இயற்கை அழகை ரசிப்பதற்காக சென்றிருந்த நிராயுதபாணிகளான சுற்றுலா பயணிகளை கொன்று குவித்ததை உலக நாடுகளும் ரசிக்கவில்லை. மனிதாபிமானம் கொண்ட அனைத்து இதயங்களும் இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை கண்டித்து வருகின்றன. கொடூரத்தை அரங்கேற்றியவர்களை தண்டிக்க வலியுறுத்தி வருகின்றன.பாதுகாப்பு அரண்களை மீறி நுழைந்து அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தி விட்டு சென்றிருக்கும் பயங்கரவாதிகளை வேட்டையாட மத்திய அரசும் உறுதியாக இருக்கிறது.இதற்காக சம்பவம் நடந்த மறுகணமே நடவடிக்கையை தொடங்கி விட்டது. தாக்குதல் நடத்தி விட்டு தப்பி ஓடியவர்களை கண்டுபிடிக்க அனைத்து நடவடிக்கைகளையும் முடுக்கி விட்டு உள்ளது.
இந்த கொலைபாதக செயலுக்கு பாகிஸ்தானின் ஆதரவு இருப்பதை உறுதி செய்துள்ள மத்திய அரசு, அந்த நாட்டுக்கு எதிராக நேரடி நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.விசா ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம், சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, வணிகம்-இறக்குமதிகளுக்கு தடை, பாகிஸ்தான் நாட்டு கப்பல்களுக்கு இந்திய துறைமுகங்களில் தடை என அடுத்தடுத்து அதிரடிகளை எடுத்து வருகிறது.மறுபுறம் மந்திரிசபை கூட்டம், அனைத்துக்கட்சி கூட்டம் என தொடர் ஆலோசனைகள் மூலம் தாக்குதலுக்கு பிந்தைய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க அனைத்துக்கட்சிகளின் ஆதரவும் பெறப்பட்டன.உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை எந்த விலைகொடுத்தேனும் தண்டிக்க அரசு உறுதிபூண்டுள்ளது.
ஆயுதப்படைகளுக்கு சுதந்திரம்
தாக்குதலை நடத்தியவர்களும், பின்னணியில் இருந்தவர்களும் கற்பனையில் கூட நினைத்து பார்த்திராத பதிலடியை எதிர்கொள்வார்கள் என பிரதமர் மோடி சூளுரைத்து உள்ளார். உலகின் கடையெல்லை வரை சென்றாலும் விடமாட்டோம் என அறிவித்தார்.ஒவ்வொரு பயங்கரவாதியும் வேட்டையாடப்படுவார் என உள்துறை மந்திரி அமித்ஷாவும் ஆவேசமாக கூறியுள்ளார்.
இவ்வாறு பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதில் உறுதியாக இருக்கும் அரசு, இந்த பதிலடியின் தன்மை, இலக்குகள் மற்றும் நேரத்தை நிர்ணயிப்பதில் இந்திய ஆயுதப் படைகளுக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளது.இதனால் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகி இருக்கிறது.இது பாகிஸ்தானுக்கு பெரும் கலக்கத்தை கொடுத்துள்ளது. இந்தியா எந்த நேரத்திலும் தங்களை தாக்கும் என அந்த நாட்டு தலைவர்கள் வெளிப்படையாக அலறி வருகின்றனர்.அப்படி தாக்கினால் பதிலடி கொடுப்போம், அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம் என மிரட்டல் அடாவடிகளிலும் இறங்கி உள்ளனர். ஏவுகணை சோதனைகளை நடத்தி சீண்டி வருகின்றனர்.ஆனாலும் பாகிஸ்தானின் இந்த மிரட்டல்களை பொருட்படுத்தாத இந்தியா, பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதிலேயே உறுதியாக இருக்கிறது.இதற்காக முப்படை தளபதிகளை ஒரே நேரத்தில் சந்தித்து ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, பின்னர் தனித்தனியாக சந்தித்து வருகிறார்.






