கெஜ்ரிவாலுக்கு 10 நாட்களுக்குள் அரசு பங்களா ; மத்திய அரசு உறுதி

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 10 நாட்களுக்குள் அரசு பங்களா ஒதுக்கப்படும் என மத்திய அரசு டெல்லி ஐகோர்ட்டில் தெரிவித்தது.
புதுடெல்லி,
ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி சட்டசபை தோல்விக்கு பிறகு முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகினார். அதன் பிறகு, கடந்த ஆண்டு கெஜ்ரிவால் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தை காலி செய்தார். அப்போது முதல் அவர் மண்டி ஹவுசுக்கு அருகில் உள்ள தனது கட்சி எம்.பி.யின் ஒருவரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் தங்கி உள்ளார்.டெல்லி முதல்-மந்திரியாக இருந்த கெஜ்ரிவாலுக்கு அரசு பங்களா ஒதுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி ஆம் ஆத்மி கட்சி கட்சி சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது மத்திய அரசு பதிலளிக்க டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இந்நிலையில் ஆம் ஆத்மி தாக்கல் செய்த மனு டெல்லி ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. ஆம் ஆத்மி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ராகுல் மெஹ்ரா வாதிடும் போது, ‘‘கடந்த காலங்களில் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட அரசு பங்களா தரம் குறைந்ததாக இருந்தது போல் இருக்க கூடாது’’ என கூறினார்.இதற்கு நீதிபதி ‘‘ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவில் திருப்தி இல்லை என்றால், ஆம் ஆத்மி கட்சி அரசை அணுக சுதந்திரம் உண்டு’’ என்றார். இதையடுத்து காணொலி காட்சி மூலம் மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘10 நாட்களுக்குள் கெஜ்ரிவாலுக்கு பொருத்தமான அரசு பங்களா ஒதுக்கப்படும். நீங்கள் எனது உறுதிமொழியை பதிவு செய்யலாம்’’ என உறுதி அளித்தார்.
பின்னர் நீதிபதி தன்னுடைய உத்தரவில் ‘‘மத்திய அரசின் உறுதிமொழியை பதிவு செய்து விட்டேன். உத்தரவை பின்னர் அறிவிப்பேன். ஒதுக்கீடு தொடர்பான அமைச்சகத்தின் நடைமுறை கவனிக்கப்பட வேண்டும். இந்த முறை அரசியல்வாதிக்கு மட்டுமல்ல, அரசியல்வாதி அல்லாதவர்களுக்கும் இது தீர்க்கப்பட வேண்டிய ஒரு பிரச்சினை’’ என்று தெரிவித்தார்.






