பணிமனையில் நின்ற அரசு பஸ் திருட்டு: மர்ம ஆசாமிக்கு போலீசார் வலைவீச்சு

அரசு பஸ்சை மர்ம நபர் திருடி செல்லும் போது அஜாக்கிரதையாக ஓட்டி சென்றதால் ஒரு வீடு, கடை மீது மோதியதால், அவை சேதமடைந்தது.
பணிமனையில் நின்ற அரசு பஸ் திருட்டு: மர்ம ஆசாமிக்கு போலீசார் வலைவீச்சு
Published on

பாலக்காடு,

கேரளம் மாநிலம் பாலக்காட்டில் அரசின் போக்குவரத்து பணிமனை உள்ளது. இந்த பணிமனையில் ஒரு அரசு பஸ் பராமரிப்பு பணி முடிந்து தனியாக நிறுத்தப்பட்டு இருந்தது.

பஸ் திருட்டு

இந்த பஸ்சை நேற்று அதிகாலை மர்ம நபர் பணிமனையில் இருந்து திருடி சென்றார். நுழைவுவாயில் மூடப்பட்டு இருந்த பணிமனையில் இருந்து அரசு பஸ் திருட்டு போனதாக தெரிகிறது. தகவல் அறிந்ததும் போக்குவரத்து ஊழியர்கள், அரசு பஸ்சை விரட்டி சென்றனர். இதை பார்த்த மர்ம நபர் பஸ்சை வேகமாக ஓட்டி சென்றார். பின்னர் பாலக்காடு நகரில் மங்களம் டவர் அருகே பஸ்சை நிறுத்திவிட்டு, அந்த நபர் தப்பி ஓடி விட்டார். தொடர்ந்து அரசு பஸ்சை ஊழியர்கள் மீட்டனர். பணிமனையில் இருந்து 6 கி.மீ. தொலைவில் அரசு பஸ் நிறுத்தப் பட்டு இருந்தது.

போலீசார் விசாரணை

இதுகுறித்த புகாரின் பேரில் பாலக்காடு தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு பஸ்சை மர்ம நபர் திருடி செல்லும் போது அஜாக்கிரதையாக ஓட்டி சென்றதால் ஒரு வீடு, கடை மீது மோதியதால், அவை சேதமடைந்தது. இதனால் அந்த நபர் அரசு பஸ்சை நிறுத்திவிட்டு சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

பணிமனையில் இருந்து அரசு பஸ் எப்படி வெளியே கொண்டு செல்லப்பட்டது? திருட்டின் பின்னணியில் யார் உள்ளனர்? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com