கர்நாடகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் 21-ந் தேதி முதல் வேலை நிறுத்தம்

சம்பள உளர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கர்நாடகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் வருகிற 21-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.
கர்நாடகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் 21-ந் தேதி முதல் வேலை நிறுத்தம்
Published on

பெங்களூரு:

சம்பள உளர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கர்நாடகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் வருகிற 21-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.

கர்நாடக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்க தலைவர் அனந்த சுப்பராவ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

வேலை நிறுத்தம்

அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதும், மாநில அரசு 17 சதவீத சம்பள உயர்வை வழங்கியது. ஆனால் போக்குவரத்து ஊழியர்களின் சம்பளத்தை அரசு இன்னும் உயர்த்தவில்லை. அதனால் நாங்கள் சம்பள உயர்வு கோரி வருகிற 21-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். அன்றைய தினம் காலை 6 மணி முதல் அரசு பஸ்கள் ஓடாது. மாநிலத்தில் சுமார் 23 ஆயிரம் பஸ்கள் இயங்காது. இந்த வேலை நிறுத்தத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட போக்குவரத்து ஊழியர்கள் கலந்து கொள்கிறார்கள்.

சம்பள உயர்வு உள்பட எங்களின் கோரிக்கைகள் குறித்து அரசுக்கு தெரியப்படுத்தி உள்ளோம். இதற்கு அரசு தரப்பில் இதுவரை எந்த பதிலும் கூறவில்லை. அதனால் நாங்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளோம். இந்த வேலை நிறுத்தத்தால் ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அதற்கு அரசே பொறுப்பு. பொதுமக்கள் எங்களை மன்னிக்க வேண்டும். தவிக்க முடியாத காரணத்தால் நாங்கள் இந்த வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளோம்.

வழக்குகள் வாபஸ்

அடிப்படை சம்பளத்தில் 25 சதவீதம் உயர்த்த வேண்டும், படியை 5 மடங்கு அதிகரிக்க வேண்டும், கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பணி நீக்கப்பட்ட அனைத்து ஊழியர்களையும் மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும், ஊழியர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்பது எங்களின் கோரிக்கைகள் ஆகும்.

இவ்வாறு அனந்த சுப்பாராவ் கூறினார்.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் மாநிலம் முழுவதும் பஸ் போக்குவரத்து முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மறுநாள் அதாவது 22-ந் தேதி உகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை கொண்டாட பெங்களூரு உள்பட முக்கிய நகரங்களில் உள்ள வெளியூர்காரர்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள். அரசு பஸ்கள் இயங்காவிட்டால் அவர்களின் பாடு திண்டாட்டம் தான். அதற்குள் அரசு ஏதாவது முடிவு எடுத்து அறிவிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com