

புதுடெல்லி,
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் தேசிய மின்னணு சுங்க வசூல் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்மூலம் தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கும் முறை ரேடியோ அலைவரிசை தொழில்நுட்பத்தில் தானியங்கி முறையில் செயல்படுத்தப்படும்.
இதனால் வாகனங்கள் சுங்க கட்டண மையத்தில் நீண்ட நேரம் காத்திருக்க தேவையில்லை. இதற்காக ஏ.டி.எம். கார்டுகள் மற்றும் வாகனங்களில் ஒட்டுவதற்கு பாஸ்டேக் ஸ்டிக்கர்கள் வழங்கப்படுகிறது. இந்த பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனங்கள் கட்டண வசூல் மையங்களில் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள பாதையில் நிற்காமல் செல்லலாம். ஸ்டிக்கர்கள் ஒட்டாத வாகனங்கள் மற்ற பாதைகளில் வழக்கம்போல கட்டணம் செலுத்தி செல்ல வேண்டும்.
அதாவது இரு மார்க்கத்திலும் தலா ஒரு பாதையில் மட்டும் இந்த தானியங்கி கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும். அந்த பாதையில் செல்லும்போது வாகனத்துக்குரிய கட்டணம் அலைவரிசை தொடர்பு மூலம் வங்கி கணக்கில் இருந்து தாமாகவே பிடித்தம் செய்யப்படும்.
கடந்த 27-ந் தேதி வரை 70 லட்சம் பாஸ்டேக் ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 26-ந் தேதி மட்டும் 1 லட்சத்து 35 ஆயிரம் ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு வழங்கப்படும் ஸ்டிக்கர்கள் விகிதம் ஜூலை மாதம் தொடக்கத்தில் இருந்ததைவிட நவம்பர் மாதத்தில் 330 சதவீதம் உயர்ந்துள்ளது.
இந்த திட்டம் டிசம்பர் 1-ந் தேதி முதல் தொடங்கப்படும் என்று மத்திய அரசு முதலில் அறிவித்தது. அதன்பின்னர் இந்த ஸ்டிக்கர்கள் வழங்குவது வேகமாக அதிகரித்தது. இப்போது அதற்கு மேலும் 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 15-ந் தேதி வரை பாஸ்டேக் ஸ்டிக்கர்கள் வழங்கப்படுகிறது.
இந்த புதிய திட்டத்தில் தினசரி பரிவர்த்தனை ஜூலை மாதம் 8.8 லட்சமாக இருந்தது நவம்பர் மாதம் 11.2 லட்சமாக உயர்ந்துள்ளது. அதேபோல தினசரி சராசரி வசூல் ரூ.11.2 கோடியாக இருந்தது ரூ.19.5 கோடியாக அதிகரித்துள்ளது.
இதுதொடர்பான உதவிக்கு நுகர்வோர் 1033 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.