

புதுடெல்லி,
டெல்லியில் இன்று மத்திய ரசாயணத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, கொரோனா சிகிச்சைக்குப் பயன்படும் மருந்துகளின் தேவை மற்றும் விநியோகம் குறித்து ஆலோசனை நடத்தினார். இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கொரோனா சிகிச்சைக்கு தேவைப்படும் மருந்துகள் உற்பத்தி அதிகரித்து உள்ளதாகவும், அதேநேரத்தில் பற்றாக்குறையை எதிர்க்கொள்ள இறக்குமதி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், மருந்து விநியோக சங்கிலி, இருப்பு, பற்றாக்குறை மற்றும் வாங்கும் சக்தி ஆகியவற்றை அரசு கண்காணித்து வருவதாக அவர் கூறியுள்ளார். ரெம்டெசிவிர் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் எண்ணிக்கை 25 நாட்களில் 20-ல் இருந்து 60 ஆக முன்று மடங்கு அதிகரிக்கப்பட்டு உள்ளதோடு, உற்பத்தி 10 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இது தவிர டோஸிலிசுமாப் மருந்துகளின் இறக்குமதியும் வழக்கத்தைவிட காலத்தை விட 20 மடங்கு அதிகரிக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்த அவர் செக்ஸாமித்தஸோன் மருந்துகளின் உற்பத்தியும் 6 முதல் 8 மடங்கு வரை அதிகரிக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டார்.
மெத்தில்பிரட்னிசோலான் ஊசி மருந்தின் உற்பத்தி ஒரே மாதத்தில் 3 மடங்கும், ஐவர்மெக்டின் மாத்திரை உற்பத்தி ஒரே மாதத்தில் 5 மடங்கும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் ஒரே மாதத்திலேயே அதன் உற்பத்தி 1.5 கோடியில் இருந்து 7.70 கோடி மாத்திரையாக அதிகரிக்கப்பட்டு உள்ளதாகவும் மத்திய அமைச்சர் மான்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.