

பாட்னா,
பீகார் மாநில அரசின் திட்டமிடல் இலாகாவில் சார்பு செயலாளராக பணியாற்றி வந்தவர், ராஜீவ் குமார்(வயது 50). இவருடைய வீடு பாட்னா நகரில் சாச்சிவலயா போலீஸ் நிலையம் அருகேயுள்ள அரசு குடியிருப்பில் உள்ளது.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் ராஜீவ்குமார் வீட்டுக்கு வந்த மர்ம மனிதர்கள் சிலர் அவருடைய வீட்டின் கதவைத் தட்டினர். இதையடுத்து வெளியே வந்த அவரிடம் மர்ம மனிதர்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். பின்னர் அவரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த ராஜீவ் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி ராஜீவ்குமாரின் மனைவி ரஜ்னி கூறுகையில், மர்ம கும்பல் வீட்டில் கொள்ளையடிக்கும் முயற்சியுடன் வந்துள்ளது. அதை தடுக்க முயன்ற எனது கணவரை அந்த கும்பல் சுட்டுக்கொன்றுவிட்டு ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுவிட்டது என்றார்.
ஆனால், இந்த படுகொலை பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ள போலீசாரோ, முன்பகை காரணமாக ராஜீவ்குமார் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கலாம் என்றும், இதை அவருடைய குடும்பத்தினர் மறைக்கிறார்களோ எனவும் சந்தேகிக்கிறோம். இந்த சம்பவம் பற்றி பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர்.